விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தொழிலாளி சாவு போலீஸ்காரர்கள் 4 பேர் மீது வழக்கு சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

பெங்களூருவில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். இதுதொடர்பான வழக்கில் போலீஸ்காரர்கள் 4 பேர் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-02-14 20:39 GMT

பெங்களூரு,

பெங்களூருவில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். இதுதொடர்பான வழக்கில் போலீஸ்காரர்கள் 4 பேர் மீது சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி சாவு

பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியில் வசித்து வருபவர் புரோகித். தொழில்அதிபர். இவருடைய வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மகேந்தர் ராதோடு(வயது 42) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், புரோகித்தின் வீட்டில் இருந்த ரூ.3.60 லட்சம் திருட்டுப்போனது. இந்த சம்பவம் கடந்த 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் 19–ந் தேதி நடந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஜே.பி.நகர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் புரோகித்தின் வீட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்த மகேந்தர் ராதோடுவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இந்த வேளையில், போலீஸ் நிலையத்தில் திடீரென்று மயங்கி விழுந்த அவரை போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்தர் ராதோடு பரிதாபமாக இறந்தார். அதனைத்தொடர்ந்து, அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்நிலையில், மகேந்தர் ராதோடு நெஞ்சுவலியால் இறந்ததாக போலீசார் கூறினர். ஆனால், போலீசார் தாக்கியதால்தான் மகேந்தர் ராதோடு இறந்ததாக அவருடைய குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனால், அவருடைய சாவில் மர்மம் நீடித்தது. இந்த மர்மசாவு குறித்த விசாரணை சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த வேளையில், மகேந்தர் ராதோடுவின் பிரேத பரிசோதனை அறிக்கை சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்தது. அந்த அறிக்கையில், மகேந்தர் ராதோடுவின் உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது போலீஸ்காரர்கள் அவரை அடித்து தாக்கியது தெரியவந்தது. அதன்பேரில், ஜே.பி.நகர் போலீஸ் ஏட்டு ஏஜாஜ் அகமது, போலீஸ்காரர்களான சித்தப்பா, மோகன் ராம், கேசவ்மூர்த்தி ஆகிய 4 பேர் மீது நேற்று முன்தினம் சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்