ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அடுத்த மாதம் 23–ந்தேதி அறிவிக்கப்படும் குமாரசாமி பேட்டி

2018–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்த மாதம் 23–ந்தேதி அறிவிக்கப்படும் என்று குமாரசாமி கூறினார்.

Update: 2017-02-14 20:32 GMT

சிக்கமகளூரு,

2018–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்த மாதம் 23–ந்தேதி அறிவிக்கப்படும் என்று குமாரசாமி கூறினார்.

அஞ்சலி

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தேகவுடாவின் மனைவி சாந்தம்மா கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த நிலையில் சாந்தம்மாவுக்கு அவருடைய குடும்பத்தினர் சார்பில் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி கலந்துகொண்டு சாந்தம்மாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தனித்து போட்டி

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2018) நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 23–ந்தேதி அறிவிக்கப்படும். ஜனதாதளம்(எஸ்) கட்சியை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிக்காக வந்தன. நாங்கள் யாரையும் தேடி சென்று கூட்டணி வைத்தது கிடையாது. இதனால், அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி யாரிடமும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடும். இதில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்த தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

முதல்–மந்திரி சித்தராமையா கட்சியின் மேலிடத்திற்கு ரூ.1,000 கோடி லஞ்சம் கொடுத்தார் என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் எடியூரப்பா குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் அவரும் பா.ஜனதா கட்சியின் மேலிடத்திற்கு லஞ்சம் கொடுத்தது பற்றி பேசிய உரையாடல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இருந்தே காங்கிரசும், பா.ஜனதாவும் மேலிடத்திற்கு பணம் கொடுத்தது தெளிவாக தெரிகிறது. ஆனால் ஜனதாதளம்(எஸ்) கட்சி யாருக்கும் பணம் கொடுக்காது.

அலட்சியம் காட்டி வருகிறது

சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள பாக்கு தோட்டங்களில் மஞ்சள் இலை நோய் தாக்கி பாக்கு செடிகள் நாசமாகி வருகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே கோரக்சிங் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியது. அந்த குழுவினரும் நோய் குறித்து ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார்கள். ஆனாலும் இதுவரை மஞ்சள் இலை நோயை தடுக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாக்கு தோட்ட விவசாயிகள் நலனில் மாநில, மத்திய அரசுகள் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

கர்நாடகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சி பணிகளை மேற்கொள்ள மாநில அரசு, மத்திய அரசிடம் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு கேட்டது. ஆனால் மத்திய அரசோ ரூ.1,700 கோடி நிதி ஒதுக்குவதாக கூறிவிட்டு தற்போது ரூ.450 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. ஆனால் அந்த நிதியும் இன்னும் மாநில அரசு கையில் கிடைக்கவில்லை என்று மத்திய அரசை குறை கூறி வருகிறது. வறட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எடுக்காமல் மாநில அரசு அலட்சியம் காட்டி வருகிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்