கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்தது

கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் மின்கம்பி உரசியதால் வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்தது. சாலையோரத்தில் லாரி நிறுத்தப்பட்டதால், 2 குடிசை வீடுகளும் தீயில் எரிந்து நாசமாயின.

Update: 2017-02-14 21:00 GMT

செங்கோட்டை,

கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் மின்கம்பி உரசியதால் வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்தது. சாலையோரத்தில் லாரி நிறுத்தப்பட்டதால், 2 குடிசை வீடுகளும் தீயில் எரிந்து நாசமாயின.

வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி

தமிழகத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அப்படி செல்லும் லாரிகள், வாகனங்கள், மினிவேன்கள் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக வைக்கோல்களை ஏற்றி சென்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் இருந்து கொல்லத்திற்கு ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. லாரியை மனோஜ் என்பவர் ஓட்டினார். ஆரியங்காவு அருகே லாரி சென்று கொண்டு இருந்த போது சாலையில் மேலே சென்று கொண்டு இருந்த மின்கம்பியில் வைக்கோல் உரசியது. இதில் தீப்பிடித்து லாரியில் இருந்த வைக்கோல் எறியத் தொடங்கின. இதை கவனிக்காமல் லாரியை டிரைவர் ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ வைக்கோல் முழுவதும் பரவியது. ஆரியங்காவு பகுதியில் சென்ற போது லாரி முழுவதுமாக தீப்பிடித்து பற்றி எரிந்தது. அப்போது, வெப்பம் அதிகமானதால் லாரி டிரைவர் மனோஜ் திரும்பி பார்த்தார். தீப்பிடித்து எரிவதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு கீழே குதித்து உயிர் தப்பினார்.

2 வீடுகள் எரிந்தன

இதற்கிடையே லாரி முழுவதும் பற்றி எரிந்த தீ சாலையோரத்தில் இருந்த 2 குடிசை வீடுகளிலும் பரவியது. இதில் 2 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. அந்த வீடுகளில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீடுகளில் இருந்த பொருட்கள் மட்டும் சேதம் அடைந்தன. மேலும் லாரியும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து உடனடியாக புனலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றிச் செல்வதால் தான் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே குறைந்த அளவே வைக்கோல் ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்