கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2017-02-15 02:30 IST

கோவில்பட்டி,

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பையா, துணை தலைவர் மகாலிங்கம், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பசும்பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.25–ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமைபால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.28–ல் இருந்து ரூ.45 ஆகவும் உயர்த்த வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ், ஊக்கத்தொகை வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆவின் பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏராளமானவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் ஜார்ஜ் நியூட்டன், செயலாளர்கள் லிங்கையா, வீரபுத்திர பாண்டி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்