திருவண்ணாமலையில் வாலிபர் இறந்த வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் வாலிபர் இறந்த வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. விபத்தில் வாலிபர் பலி செங்கம் தாலுகா புரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மலர் (23). 29–1–2012–ம் ஆ

Update: 2017-02-14 22:30 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் வாலிபர் இறந்த வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விபத்தில் வாலிபர் பலி

செங்கம் தாலுகா புரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மலர் (23). 29–1–2012–ம் ஆண்டு சுரேஷ் மோட்டார் சைக்கிளில் திருவண்ணமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

செங்கத்தை அடுத்த சுண்டக்காபாளையம் அருகே வந்தபோது எதிரே திருவண்ணமலையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நஷ்டஈடு

அரசு பஸ் மோதி உயிரிழந்த சுரேஷ் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவரது உறவினர் கோவிந்தன் திருவண்ணாமலை சிறப்பு விபத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி சாந்தி ரூ.29 லட்சத்து 80 ஆயிரத்து 819–ஐ விபத்து நஷ்டஈடாக அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என கடந்த 2013–ம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார். ஆனால் போக்குவரத்து கழகத்தினர் பணம் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 2016–ம் ஆண்டில் திருவண்ணாமலை சிறப்பு விபத்து நீதிமன்றத்தில் கோவிந்தன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி பக்தவச்சலம் ரூ.33 லட்சத்து 68 ஆயிரத்து 548–ஐ விபத்தில் உயிரிழந்த சுரேஷ் மனைவி மலருக்கு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரவிட்டார்.

அரசு பஸ் ஜப்தி

இதுகுறித்து கோர்ட்டு ஊழியர்கள் அரசு போக்குவரத்து கழக அலுவலரிடம் பேசி உள்ளனர். ஆனால் அவர் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று மதியம் திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் புறப்பட இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஐப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்