செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு கட்ட நிதி ஒதுக்கீடு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு கட்ட ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு மத்திய குழு ஆய்வு

Update: 2017-02-13 23:00 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவுக்காக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அதற்கான இடத்தை மத்திய மருத்துவ விபத்து சிகிச்சை குழுவினர் ஆய்வு செய்தனர்.

ரூ.14 கோடி ஒதுக்கீடு

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவுக்காக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு ரூ.14 கோடியை ஒதுக்கி உள்ளது. இதற்காக மத்திய மருத்துவ விபத்து சிகிச்சை குழு நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் குணசேகரன் கூறியபோது:–

காஞ்சீபுரம் மாவட்டம் மட்டுமல்லாது விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருவது செங்கல்பட்டு அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் தற்போது அதி நவீன மருத்துவ முறையை டாக்டர்கள் கையாண்டு வருகின்றனர்.

உயிர் சேதம்

கடந்த வருடம் முதல் பல கோடி ரூபாய் செலவில் அதி நவீன மருத்துவ கருவிகள் வரவழைக்கப்பட்டு நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தலையில் ஏற்படும் காயம், சாலை விபத்தில் கை, கால்கள் முறிவு காரணமாக வரும் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால் சென்னைக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகளை செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர்சேதம் ஏற்படுகின்றது.

மத்திய குழு ஆய்வு

இதை தவிர்க்க மத்திய அரசு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை மேம்படுத்தவும், அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவுக்கு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டவும் தற்போது ரூ.14 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் அவசர உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைய உள்ள இடத்தை நேற்று மத்திய மருத்துவ விபத்து சிகிச்சை குழுவினர் ஆய்வு செய்தனர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்த அறிக்கையும் மருத்துவ குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் அரசு மருத்துவமனையில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தற்போது மருத்துவமனை வளாகத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்