ராகுல்காந்திக்கு எதிராக போராட்டம் பாரதீய ஜனதா கட்சியினர் கைது

ராகுல்காந்திக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-02-13 22:45 GMT
ஆர்ப்பாட்டம்

பிரதமர் நரேந்திரமோடியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அரசியல் நாகரீகமின்றி விமர்சித்ததாக கூறி புதுவை இந்திராகாந்தி சிலை அருகே பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் அணி பொதுச்செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ரவிச்சசந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அணி பொறுப்பாளர்கள் கோபி, ரீனா, கணேஷ், தாமோதரன், மவுலித்தேவன், அருள்முருகன், ரத்தினவேலு, அசோக்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ராகுல்காந்தி படம்

ஆர்ப்பாட்டத்தின்போது சிலர் மறைத்து வைத்திருந்த ராகுல்காந்தியின் உருவப்படத்தை எடுத்து கிழித்து எறிந்தனர். அதை போலீசார் தடுக்க முயன்றபோது அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காமராஜர் சிலை அருகே மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் ராகுல்காந்தியை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் அவர்கள் ராகுல்காந்தி உருவப்படத்தை கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை போலீசார் சுமார் 50 பேரை கைதுசெய்தனர்.

கொடும்பாவி எரிக்க முயற்சி

காந்திநகர் தொழிலாளர் துறை அருகில் உழவர்கரை மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது ராகுல்காந்தியின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அதை அவர்களிடம் இருந்து போராடி போலீசார் பறித்துச் சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 45 பேரையும் கைதுசெய்தனர். நேற்று நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட பாரதீய ஜனதா கட்சியினர் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்