திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

Update: 2017-02-13 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகேயுள்ள வடஆண்டாப்பட்டு கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 3 மாதங்களாக வடஆண்டாப்பட்டு கிராமத்துக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிராம மக்கள் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதன்பின்னரும் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று குடிநீர் வழங்கக்கோரி வடஆண்டாப்பட்டு கிராமம் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை புறவழிச்சாலை கூட்ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஷ்குமார், திருவண்ணாமலை கிழக்கு, மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஷ்குமார், வடஆண்டாப்பட்டு கிராமத்துக்கு 10 நாட்களுக்குள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்