திருச்சியில் மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் சாலை மறியல் பெண்கள் உள்பட 29 பேர் கைது

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரி திருச்சியில் மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2017-02-13 23:00 GMT
திருச்சி,

ஜனாதிபதி ஆட்சியை...

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க. பொது செயலாளரும், சட்டமன்ற அ.தி.மு.க. கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவிற்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியாக கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து ஆட்சி அமைக்க தங்களை அழைக்க கோரினர். கவர்னர் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு எந்திரங்கள் செயல்படாமல் முடங்கி போய் உள்ளதாகவும், ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கவர்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் நேற்று காலை திடீரென அறிவித்தனர். அதன்படி அக்கட்சியின் நிறுவன தலைவர் வக்கீல் பொன் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

29 பேர் கைது

இந்த நிலையில் மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 9 பெண்கள் உள்பட மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்