கொலைசெய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் ஆயுதப்படை போலீஸ் குவிப்பு

கொலைசெய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவி இறுதி ஊர்வலத்தை தொடர்ந்து வேலூரில் பாதுகாப்புக்காக ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Update: 2017-02-13 23:00 GMT
வேலூர்,

கடைகள் அடைப்பு

வேலூரை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி (வயது 55). அ.தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று முன்தினம் காட்பாடியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது திருமண மண்டபத்தில் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காட்பாடி, வேலூரில் கடைகள் அடைக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

கொலைசெய்யப்பட்ட ஜி.ஜி.ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜி.ஜி.ரவியின் வீடு வேலூர் காந்திரோட்டில் இருப்பதால் ஆற்காடு ரோடு, காந்திரோடு, பாபுராவ் தெரு, மெயின்பஜார் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் கடைகள் திறக்கப்படவில்லை. மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது.

ஆயுதப்படை போலீசார் குவிப்பு

முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு ஜி.ஜி.ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு உடல் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்சுக்கு முன்பு நூற்றுக்கணக்கானவர்கள் மோட்டார்சைக்கிளில் ஊர்வலமாக வந்தனர்.

ஆஸ்பத்திரியில் இருந்து ஜி.ஜி.ரவியின் உடல் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து ஆற்காடு ரோடு பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் 1 மணியளவில் ஜி.ஜி.ரவியின் உடல் அவருடைய வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சடங்குகள் செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அப்போது ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

மேலும் ஆற்காடுரோடு மற்றும் காட்பாடி ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

பஸ் மீது கல்வீச்சு

முன்னதாக அமிர்தியில் இருந்து வேலூர் பழைய பஸ்நிலையத்திற்கு வந்த அரசு பஸ்மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதனால் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜி.ஜி.ரவி இறுதி ஊர்வலத்தை தொடர்ந்து நேற்று வேலூரில் உள்ள ஒருசில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. சில தனியார் பள்ளிகள் நேற்று மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்திருந்தன. 

மேலும் செய்திகள்