அமைச்சர் துரைக்கண்ணுவை காணவில்லை என கலெக்டரிடம் புகார் சசிகலாவுக்கு ஆதரவாகவும் மனு கொடுத்ததால் பரபரப்பு

அமைச்சர் துரைக்கண்ணுவை காணவில்லை. இதனால் அவரிடம் விவசாயிகளுக்கு நிவாரணம் தொடர்பாக மனு கொடுக்க முடியவில்லை. எனவே அமைச்சரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்துள்ளார்.;

Update: 2017-02-13 23:00 GMT
தஞ்சாவூர்,

இதே போல் சசிகலாவுக்கு ஆதரவாக, அ.தி.மு.க. வக்கீல் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. பிரமுகர் புகார்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கலெக்டர் அண்ணாதுரையிடம், தஞ்சை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத்தலைவரும், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவருமான ரவிச்சந்தர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருக்காட்டுப்பள்ளி பகுதி வறட்சி பாதித்ததாக அறிவிக்கப்படவில்லை. பயிர் காப்பீடு இல்லை. நிவாரணம் இல்லை. இது தொடர்பாக கடந்த 5-ந்தேதி நான் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரிக்கு சென்று வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முறையிட்டு மனு கொடுக்க சென்றேன். ஆனால் வீட்டில் அவரை காணவில்லை.

அமைச்சரை காணவில்லை

திருவையாறு ஒன்றியத்தில் முதல்-அமைச்சர் அறிவித்த எந்திர நடவுத்தொகை ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.800 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது. இதற்காகவும் அமைச்சர் துரைக்கண்ணுவை பார்க்க சென்னையில் அரசு ஒதுக்கி உள்ள அவரது இல்லத்துக்கு சென்றேன். அங்கும் அவரை காணவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இளைஞரணியில் என்னோடு பணியாற்றிய நண்பர் என்ற முறையில் அவரை யாரோ கடத்தி சென்று இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறேன். எனவே அமைச்சரை கண்டுபிடித்து தருமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

சசிகலாவுக்கு ஆதரவாக மனு

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சியை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் ராஜபிரபு, கலெக்டர் அண்ணாதுரை யிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் மதுக்கூர் ஒன்றிய அ.தி.மு.க. இளம்பெண்கள், இளைஞர் பாசறையின் இணை செயலாளராக இருந்தேன். தற்போது அ.தி.மு.க.வில் தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறேன். முதல்-அமைச்சராக ஜெய லலிதா இருந்த போது நாடு செழிப்புடன் இருந்தது. ஜெய லலிதாவின் நல்லாட்சி தொடர அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர் கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். எனவே கவர்னர் வித்யாசாகர் தாமதப்படுத்தாமல் சசிகலாவுக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு கலெக்டர் இந்த மனுவினை கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். 

மேலும் செய்திகள்