ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க திட்டம் அமைச்சர் கந்தசாமி தகவல்

ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க திட்டமிருப்பதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2017-02-13 22:15 GMT
இலவச புத்தகம்

தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சென்னை தொழிற்கல்வி பாடப்புத்தக நிலையம் தேசிய தரத்தில் தயாரித்துள்ள பாடநூல்களை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலைய (மகளிர் ஐ.டி.ஐ.) மாணவிகளுக்கு இந்த இலவச புத்தக வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி விழாவில் கலந்துகொண்டு இலவச புத்தகங்களை வழங்கினார்.

தொழிற்கல்வி

அப்போது அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–

தொழிற்பயிற்சி கற்கும் மாணவிகள் முழு கவனத்தோடு பயிற்சி பெற்று தொழில் நிறுவனங்களில் நல்ல பணிகளில் அமரவேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் புதிய தொழில் அதிபர்களாக முன்னேறி புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும்.

புதுவையை பொறுத்தவரை பெரும்பாலான மாணவ, மாணவிகள் டாக்டர், என்ஜினீயர் படிப்பு படித்து வருகின்றனர். சிலர் மட்டுமே தொழிற்கல்வியை கற்கின்றனர்.

மதிய உணவு

இதனால் பிளம்பர், எலக்கட்ரீசியன் போன்ற பணிகளுக்கு தமிழகத்தில் இருந்துதான் ஆட்களை கொண்டுவர வேண்டியுள்ளது. அந்த நிலை மாறவேண்டும். இதுபோன்ற வேலைகளும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே கிடைக்கவேண்டும்.

பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்கப்படுவதைப்போல் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்க முதல்–அமைச்சரிடம் பேசி உள்ளேன். அதற்கான நிதியை தயார் செய்து இந்த திட்டத்தை செயல்படுத்துவோம்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர்துறை துணை ஆணையர் ஜெயக்குமார், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சாரங்கராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்