சிறுவாணி அணையில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் பணி தீவிரம்
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, சிறுவாணி அணையில் மோட்டார் வைத்து உறிஞ்சி கோவைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவைக்கு சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், நீரேற்றும் பகுதியில் உள்ள 3 வால்வுகளும் வெளியே தெரிந்து வருகிறது. இதனால் கோவைக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்த 8 கோடி லிட்டர் படிப்படியாக குறைந்து தினமும் 15 லட்சம் லிட்டர் அளவுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
சிறுவாணி அணை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த 30 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலை ஏற்பட்டது. பில்லூர் அணைப்பகுதியில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீர், சிறுவாணி குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டது. 5 வார்டுகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. சிறுவாணி அணையில் இருந்து போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பல வார்டுகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சிறுவாணியில் மோட்டார்சிறுவாணி அணைப்பகுதியில் தேங்கி உள்ள நீரை, மோட்டார் வைத்து உறிஞ்சி நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வர கேரள அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சிறுவாணி அணைப்பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ராட்சத மோட்டாரை பொருத்தி, 5 குழாய்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, நீரேற்றும் மையத்துக்கு தினமும் குடிநீரை கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–
மோட்டார் பொருத்தப்பட்ட பின்னர், கோவைக்கு தினமும் 1 கோடியே 70 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை வார்டுகளுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பில்லூர் குடிநீர்பில்லூர் அணையில் இருந்து தினமும் 13 கோடி லிட்டர் குடிநீர் கோவை நகருக்கு வழக்கம்போல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தையொட்டி அணைகளில் நீர் குறைந்து இருப்பதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.