ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 46 குடிசைகள் அகற்றம் நகராட்சியை கண்டித்து போராட்டம்

தேனியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 46 குடிசைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனால் நகராட்சியை கண்டித்து ஆக்கிரமிப்பு செய்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-02-13 22:30 GMT
ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கான பழைய குப்பைக் கிடங்கு கம்போஸ்ட் ஓடைத்தெருவில் அமைந்து இருந்தது. இந்த குப்பைக் கிடங்கு தற்போது பயன்பாட்டில் இல்லை. பழைய குப்பைக் கிடங்கு அமைந்துள்ள இடத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்கள், புதர்களை சமீபத்தில் நகராட்சி நிர்வாகம் அகற்றியது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் இந்த இடத்தில் குடிசைகள் அமைக்க முயன்றனர்.

இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திச் சென்று விட்டனர். ஆனால், அதன்பிறகு அங்கு குடிசைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, நேற்று இப்பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

இந்த நடவடிக்கையால், அங்கு அமைக்கப்பட்டு இருந்த சுமார் 46 குடிசைகள் அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடிசைகள் அகற்றப்பட்டதை கண்டித்து அப்பகுதியிலேயே பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களுக்கு இப்பகுதியில் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்றும், அதுவரை இங்கேயே போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்