குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

கடலூரில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் ராஜேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2017-02-13 22:00 GMT
விழிப்புணர்வு பிரசாரம்

கடலூர் மாவட்ட சமூகநலம், சத்துணவு திட்டத்துறை மற்றும் யுனிசெப் நிறுவனம் சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க விழா கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அந்த வாகனத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரசார குழுவினர் தாரை தப்பட்டை அடித்து குழந்தை திருமண தடுப்பு குறித்த பாடலை பாடியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தியதை கலெக்டர் பார்வையிட்டார். இதில் மாவட்ட சமூகநல அலுவலர் மீனா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலு, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணா, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஹெலன்ராணி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சண்முகம், யுனிசெப் ஒருங்கிணைப்பாளர் வருண் மற்றும் கல்லூரி மாணவிகள், நேரு யுவகேந்திரா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் இந்த விழிப்புணர்வு பிரசாரம் குறித்து சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கலைநிகழ்ச்சிகள்

குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் இன்று(அதாவது நேற்று) முதல் 15–ந்தேதி(நாளை, புதன்கிழமை) வரையில் விருத்தாசலம், மங்களூர் மற்றும் நல்லூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், குக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள இளம்பெண்கள், பெண் குழந்தைகள், ஆசிரியர்கள், சுயஉதவி குழு பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

18 வயது நிரம்பாத பெண்ணுக்கும், 21 வயது பூர்த்தியடையாத ஆணுக்கும் திருமணம் நடைபெறுவதை தடுப்பதே இந்த விழிப்புணர்வின் முக்கியத்துவம் ஆகும். சிறுவயதில் திருமணமாகும் பெண்களின் உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதையும், சட்டத்தால் அளிக்கப்படும் பாதுகாப்பை விளக்குவதும், பரிந்துரைக்கப்படும் தண்டனைகள் குறித்து வீதி நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கி கூறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு 179 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் அதிகாரி தகவல்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2016–17–ம் ஆண்டு பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், சைல்டு லைன் ஆகியன மூலம் 179 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறத்தப்பட்டுள்ளன. இதில் 20 சிறுமிகளுக்கு மறுவாழ்வு நிதியாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாக சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்