சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 31 தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களை விடுவிக்கக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 31 தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களை விடுவிக்கக்கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது, வளரும் சமூக வழக்கறிஞர்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் செபாஸ்டியன் தலைமையில் வக்கீல்கள் அங்கு வந்தனர். பின்னர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
மொத்தம் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில், 32 பேர் தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்கள் ஆவர். இவர்களில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. தவிர மற்ற 31 பேரும் விருப்பத்துக்கு மாறாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்.
வருவாய் அலுவலரிடம் மனுமேலும், இதுவரை ஆளுங்கட்சியில் தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அவர்களுக்கு முக்கிய துறைகளில் பிரதிநிதித்துவ அடிப்படையில் குறைந்தபட்சம் 7 அமைச்சர் பதவிகளாவது கேட்டுப்பெற வேண்டும். இல்லையென்றால் புதிய அரசை தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில், வளரும் சமூக வழக்கறிஞர்கள் முன்னணியின் மாநில தலைவர் சவுந்திரபாண்டியன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேஸ்முக் சேகர் சஞ்சய் ஆகியோரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், தமிழகத்தில் நிலவி வரும் நிரந்தரமற்ற அரசியல் சூழ்நிலையால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதற்கிடையே தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்கள் எங்காவது சிறைவைக்கப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.