குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-02-13 22:00 GMT
சாலை மறியல்–பஸ் சிறைபிடிப்பு

சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி வண்டிபாளையம். இந்த பகுதியில் 200–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் வண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பகல் 10.30 மணி அளவில் ஒன்று திரண்டு அங்குள்ள புஞ்சைபுளியம்பட்டி ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சையும் சிறைபிடித்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘வண்டிபாளையம் பகுதியில் உள்ளவர்களுக்கு விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தாங்கள் சிறைபிடித்த பஸ்சை விடுவித்து அங்கிருந்து பகல் 11.15 மணி அளவில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சத்தியமங்கலம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்