1½ மாதமாக தண்ணீர் வரவில்லை: பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம்

1½ மாதமாக தண்ணீர் வரவில்லை என்று புகார் கூறி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-02-13 21:45 GMT
தண்ணீர் வரவில்லை...

பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி 9–வது வார்டில் குமரன்வீதி, பிள்ளையார் கோவில் வீதி, திலகர் வீதி, பாரதியார் வீதி என 4 வீதிகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்குழாய் அமைத்து குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டிற்காக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 1½ மாதமாக இந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இந்தநிலையில் தண்ணீர் வினியோகம் செய்யாததை கண்டித்து 9–வது வார்டை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று பகல் 12 மணியளவில் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், பேரூராட்சி செயல் அதிகாரி சசிகலா பேரூராட்சி அலுவலகத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘ஆழ்குழாய் கிணற்றின் மோட்டார் பழுதானதால்தான் தண்ணீர் வினியோகிக்க முடியவில்லை. 24 மணி நேரத்தில் பழுது நீக்கி தண்ணீர் வினியோகிக்கப்படும்‘ என்று உறுதி கூறினார். அதை ஏற்றுக்கொண்டு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

மேலும் செய்திகள்