வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

ஹாசன், சிக்கமகளூரு மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2017-02-12 23:14 GMT

சிக்கமகளூரு,

ஹாசன், சிக்கமகளூரு மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

எகட்டி அணையை பார்வையிட்டனர்

கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய வேளாண்மை துறை கூடுதல் செயலாளர் ஜலஜிஸ்ரீவத்சவ் தலைமையில் அனுராதா, மோகன் முரளி, சதிதேவ் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவின ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் மைசூரு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர் நேற்று ஹாசன் மாவட்டத்திற்கு வந்தனர்.

அவர்களுக்கு ஹாசன் கலெக்டர் சைத்ரா, ஹாசன் மாவட்ட பொறுப்பு செயல் அதிகாரி வெங்கடேஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது சிக்கமகளூரு கலெக்டர் சத்தியவதி, சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு செயல் அதிகாரி ராகப்பிரியா ஆகியோர் உடன் இருந்தனர். அதை தொடர்ந்து ஹாசன் மாவட்டம் பேளூரில் உள்ள எகட்டி அணையை பார்வையிட மத்தியக் குழுவினர் சென்றனர். இந்த எகட்டி அணையின் நீர், பேளூரு சுற்று வட்டாரம் மற்றும் சிக்கமகளூரு மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் வரை...

எகட்டி அணையின் நீர் வரத்து, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் பற்றி மத்திய குழுவினர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தற்போது அணையில் உள்ள நீர், வருகிற ஜூன் மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தனர். அதைதொடர்ந்து பேளூர், ஹாசன் பகுதிகளில் வறட்சியால் பாதித்த இடங்களை பார்வையிட்டனர். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் பார்வையிட்டனர். அப்போது வறட்சியால் கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன் பின்னர் சிக்கமகளூரு மாவட்டத்திற்கு சென்ற மத்திய குழுவினர், கடூர் தாலுகா ஈஸ்வரஹள்ளி பகுதியில் உள்ள குளத்தை பார்வையிட்டனர். அதைதொடர்ந்து சிக்கமகளூரு மர்லே, பெலவாடி, கலசாபுரா ஆகிய கிராமங்களுக்கு சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

அப்போது அவர்களிடம் விவசாயிகளும், பொதுமக்களும், வறட்சியால் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் கால்நடைகளும் உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன. எனவே வறட்சியால் கருகிய பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதை கேட்டறிந்த மத்திய குழுவினர், சிக்கமகளூரு அருகே நிடுகட்டா, சிங்கட்டிகெரே பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின்னர் சிக்கமகளூரு கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் வறட்சி பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி நிவாரணப் பணிகளை பற்றியும் கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்