தூய லூர்து அன்னை ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

தென்னூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2017-02-12 22:30 GMT
வரதராஜன்பேட்டை, -

தூய லூர்து அன்னை ஆலயம்

அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டையை அடுத்துள்ள தென்னூர் கிராமத்தில் தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி திண்டிவனம் தமிழ்நாடு முப்பணி நடுநிலையம் இயக்குனர் அருட்தந்தை பிலோமின்தாஸ் தலைமை தாங்கி புனித கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவரது தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு சிறுதேர்பவனியும், திருப்பலி மறையுரை சிந்தனைகள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வும், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. தொடர்ந்து 10-ந் தேதி மறைவட்ட முதன்மை குரு கோஸ்மான் ஆரோக்கியராஜ் மற்றும் ஜெயங்கொண்டம் மறைவட்ட அருட்தந்தையர்கள் நடத்திய கூட்டு திருப்பலி நடைபெற்றது.

தேர்பவனி

அதை தொடர்ந்து இரவு புனித மிக்கேல் அதி தூதர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், புனித சூசையப்பர் மற்றும் புனித லூர்து அன்னை தேர்கள் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற்றது. இதில் வரதராஜன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி மற்றும் மண்ணின் அருட்தந்தையர்கள் ஆகியோர் புனித லூர்து அன்னையின் திருப்பலி நடத்தினர்.

அதனைதொடர்ந்து கொடி இறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை செல்வராஜ், பங்குப்பேரவையினர் மற்றும் தென்னூர் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்