ராமியம்பட்டி, வி.ஜெட்டிஅள்ளி கிராமங்களில் குடும்ப அட்டைதாரர்களின் குறைதீர்க்கும் முகாம்

ராமியம்பட்டி, வி.ஜெட்டிஅள்ளி கிராமங்களில் குடும்ப அட்டைதாரர்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2017-02-12 22:45 GMT
காரிமங்கலம்,

குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரால் நடத்தப்படும் பொது வினியோகத்திட்ட ரேஷன்கடைகளில் நுகர்வோருக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் குடும்ப அட்டைதாரர்களின்குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் மாவட்டத்தில் ராமியம்பட்டி, வி.ஜெட்டிஅள்ளி உள்ளிட்ட 7 கிராமங்களில் நடைபெற்றது.

காரிமங்கலம் அருகே உள்ள ராமியம்பட்டியில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் வள்ளி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் மற்றும் வருவாய் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்கள் பெறப்பட்டன. இதில் அனைத்து மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வி.ஜெட்டிஅள்ளி

தர்மபுரி அருகே உள்ள வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தில் நடந்த முகாமிற்கு குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஜெயலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பாக பொதுமக்கள் மொத்தம் 75 மனுக்கள் கொடுத்தனர். இதில் 50 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு முகாமிலேயே பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகாந்தன், தனிவருவாய் ஆய்வாளர் மரகதவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்