வாழ்க்கையில் நேர்மையை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் நீதிபதிகள் அறிவுரை

வாழ்க்கையில் நேர்மையை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று, ஆலத்தூர் அரசு பள்ளி முப்பெரும் விழாவில் நீதிபதிகள் கூறினர்.

Update: 2017-02-12 22:30 GMT
தஞ்சாவூர்,

முப்பெரும் விழா

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆலத்தூர் அரசு ஊரக ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா, மகளிர் உயர்நிலைப்பள்ளி வெள்ளி விழா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொன் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் யோகானந்தம் வரவேற்றார்.

ஆலத்தூர் அரசு பள்ளியில் பயின்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் பாரதிதாசனை கவுரவிக்கும் வகையில் இந்த விழா நடந்தது. இதில் நீதிபதி பாரதிதாசனை கவுரவிக்கும் வகையில் அவருடன், ஐகோர்ட்டு நீதிபதிகள் சத்தியநாராயணன், சி.டி.செல்வம், கிருபாகரன், சுந்தரேஷ், கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நேர்மையை கடைபிடிக்க வேண்டும்

பின்னர் ஆலத்தூர் அரசுப்பள்ளியில் பயிலும் 1500 மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றிய பாரதிதாசன் உள்ளிட்ட நீதிபதிகளும் “மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். நல்லொழுக்கம் வேண்டும் என்று கூறியதோடு பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறினர். இதையடுத்து பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற 40 ஆசிரியர்களை நீதிபதிகள் கவுரவித்தனர்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் நக்கீரன் (தஞ்சை), சீனிவாசன் (திருவாரூர்), பாலகிருஷ்ணன் (நாகை), பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, தாசில்தார் ரவிச்சந்திரன், ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கருணாகரன், ஆலத்தூர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மரகதம் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்த 9 நீதிபதிகளையும், தாரை, தப்பட்டை முழங்க கலை நிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்