மின்கசிவால் வீடுகள் எரிந்து சாம்பல்: கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின
சோமங்கலத்தில் மின்கசிவால் 2 வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. அங்கு இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த சோமங்கலம், மேட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மன் (வயது 60). இவரது மகன் சுப்பிரமணி (34). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் அருகருகே தனித்தனியாக ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சுப்பிரமணி தனது வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று விட்டார். நேற்று மதியம் திடீரென சுப்பிரமணியின் வீட்டுக்குள் இருந்து புகை வர ஆரம்பித்தது.
அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். வீட்டில் தீப்பிடித்து இருப்பதை பார்த்த அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயின் வேகம் குறையாமல் அருகில் இருந்த அவரது தந்தை தர்மன் வீட்டுக்கும் தீ பரவியது. இது குறித்து இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கியாஸ் சிலிண்டர்கள் வெடித்தனதீயணைப்பு வாகனம் வருவதற்கு தாமதம் ஆனதால் பொதுமக்களே தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். திடீரென 2 வீட்டுக்குள்ளும் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து வீட்டு மேற்கூரையை பிய்த்துக்கொண்டு மேலே சென்று பின்னர் கீழே விழுந்தது. இதை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் நாலாபுறமும் சிதறி அடித்து ஓடினார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2 வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, டி.வி., துணிகள், 10 பவுன் நகை மற்றும் பணம் தீயில் எரிந்து நாசம் ஆனது.
மின்கசிவால் விபத்துஇந்த வீடுகளுக்கு அருகில் இருந்த மற்ற 2 வீடுகளின் மேல் இருந்த தண்ணீர் தொட்டி, கதவு உள்ளிட்டவையும் தீயில் எரிந்து நாசம் ஆனது. இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.