அ.தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக் கொலை மர்ம கும்பல் வெறிச்செயல்

காட்பாடியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற அ.தி.மு.க. பிரமுகர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் வேலூர், காட்பாடி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

Update: 2017-02-12 23:30 GMT
காட்பாடி,

வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அ.தி.மு.க. பிரமுகர்

வேலூர் மாநகராட்சி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜி.ஜி.ரவி (வயது 55). தொழில் அதிபரான இவர், வேலூர் அருகே பொறியியல் கல்லூரி நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு 8-30 மணியளவில் காட்பாடியில் சித்தூர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண வரவேற்பு விழாவுக்கு காரில் சென்றார். திருமண மண்டபத்திற்கு சென்றதும் மண்டபத்திற்கு வெளியே கேட் அருகில் டிரைவர் காரை நிறுத்தினார்.

உடனே ஜி.ஜி.ரவி காரில் இருந்து இறங்கினார். டிரைவர் காரை ஓரமாக நிறுத்துவதற்காக சென்றார். இதனால் ஜி.ஜி.ரவி திருமண மண்டபத்தின் கேட் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது. இந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் ஜி.ஜி.ரவியை சரமாரியாக வெட்டியது.

வெட்டிக்கொலை

இதைப் பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு ஓடிவந்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டது. மர்ம கும்பல் வெட்டியதில் ஜி.ஜி.ரவியின் தலை, கழுத்தில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் அங்கேயே ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

திருமணமண்டபத்தில் ஒருவர் வெட்டப்பட்டதை பார்த்ததும் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திருமண மண்டபத்தின் கேட் மூடப்பட்டது. ஜி.ஜி.ரவி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் தடியடி

வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாண்டி, அறிவழகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை ஜி.ஜி.ரவியின் உறவினர்கள் முற்றுகையிட்டு மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தரவேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர். போலீசார் சமரசம் செய்தும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருமண மண்டபத்திற்குள் புகுந்து அங்கிருந்த பூந்தொட்டிகளை அடித்து உடைத்தனர். இதனால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட ஜி.ஜி.ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜி.ஜி.ரவி கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக ரவுடி மகா கூட்டாளிகள் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜி.ஜி.ரவி கொலை செய்யப்பட்ட தகவல் காட்டுத்தீ போல பரவியதால் காட்பாடி மற்றும் வேலூரில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இது குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் வேலூரில் பதற்றம் நிலவி வருகிறது. 

மேலும் செய்திகள்