வேப்பங்குப்பம் அருகே சூரியசக்தி விளக்கு பேட்டரிகள் நூதன முறையில் திருட்டு

வேப்பங்குப்பம் அருகே 2 வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சூரியசக்தி விளக்கு பேட்டரிகளை நூதன முறையில் திருடிச்சென்ற 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2017-02-12 22:15 GMT
அணைக்கட்டு,

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பேட்டரி திருட்டு

அணைக்கட்டு அருகே உள்ள வேப்பங்குப்பத்தை அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவருக்கு அரசு திட்டத்தின்கீழ் பசுமைவீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் சோலார் மின்விளக்கு எனப்படும் சூரியசக்தி மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மஞ்சுநாதன் நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தார்.

அவருடைய மகள் பிரியங்கா மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் “வீட்டில் உள்ள சூரியசக்தி விளக்கிற்கான பேட்டரி பழுதாகி இருப்பதால் அதை சரிசெய்யவேண்டும் என்று உங்களது தந்தை மஞ்சுநாதன் கூறியதால் வந்துள்ளோம்” எனக்கூறி அந்த விளக்கிலிருந்த பேட்டரியை கழற்றினர்.

விசாரணை

அதேபோன்று அருகில் வசிக்கும் கோவிந்தன் என்பவருடைய வீட்டில் இருந்தும் சூரியசக்தி விளக்கு பேட்டரியை எடுத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த மஞ்சுநாதன் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது பேட்டரி இல்லாததை பார்த்த அவர் அதுபற்றி மகளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் நீங்கள் கூறியதாக 2 பேர் பேட்டரியை எடுத்து சென்றனர் என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுநாதன் விசாரித்தபோது ராமநாய்க்கன்பேட்டையை சேர்ந்த கவியரசன், கொடையாஞ்சியை சேர்ந்த மதன்குமார் ஆகியோர் பேட்டரியை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் மஞ்சுநாதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்