திருவள்ளூர் மாவட்டத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க அரசு மானியம் கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் தீவன சோளப்பயிர் வளர்க்க அரசு மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-12 22:30 GMT
பசுந்தீவன உற்பத்தி திட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தற்போது நிலவும் வறட்சியால் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தமிழக முதல்–அமைச்சரின் அறிவிப்பின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.8 லட்சம் செலவில் குறுகிய கால பசுந்தீவன உற்பத்தி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் குறைந்த பாசன வசதியில் அதிக அறுவடை செய்யக்கூடிய தீவன சோளத்தை விவசாயிகள் நிலத்தில் பயிரிட்டு பயனடையலாம்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் தீவனச்சோளம் உற்பத்தி செய்ய ஆகும் நடைமுறை செலவு ரூ.4 ஆயிரம் ஆகும். இதில் அரசு மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

2 லட்சம் கால்நடைகள்

தீவன சோளத்தை விவசாயிகள் கால்நடைகளுக்கு பசுந்தீவனமாகவோ அல்லது உலர வைத்து சோளத்தட்டையாகவோ வழங்கலாம். விதைத்த 50 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 10 டன் பசுந்தீவனத்தை அறுவடை செய்யலாம். இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் கால்நடைகளுக்கும் வறட்சி காலத்தில் பசுந்தீவனம் கிடைக்கும் பொருட்டு இந்த திட்டம் 400 ஏக்கரில் அமல் படுத்தப்பட உள்ளது.

ஆகவே திருவள்ளூர் மாவட்டத்தில் சிறிதளவு தண்ணீர் பாசன வசதியுடன் குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகள் மானிய தொகை பெறுவதற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் நாளை மறுநாளுக்குள் (புதன்கிழமை) விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்