தமிழகத்தில் திராவிட இயக்க அரசியலை புறக்கணிக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி தலைவர் பேட்டி

தமிழகத்தில் திராவிட இயக்க அரசியலை புறக்கணிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2017-02-12 21:45 GMT
காதலர் தினம்

தமிழகம் முழுவதும் வருகிற 14-ந் தேதி காதலர் தின கொண்டாட்டம் என்ற கலாசார சீரழிவு நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். வருகிற 14-ந் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய சுதந்திர போராட்ட தியாகிகள் தூக்கிலிடப்பட்ட நாள். அந்த நாள் தேசபக்தி தினமாகவும், கோவை குண்டு வெடிப்பு நினைவு தினமாகவும் வருகிறது. இதையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் திராவிடர் கழகங்கள், முஸ்லிம் அமைப்புகள் இணைந்து மைல் கல் மற்றும் ஊர்ப்பெயர் பலகைகளில் இந்தி மொழியை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மைல்கல், பெயர்ப்பலகையில் இந்தி எழுத்துக்களை அழிப்பது என்பது சட்டவிரோதமானது. நாடு முழுக்க உள்ள பயணிகள் வந்து செல்லும்போது அவர்களுக்கு வசதியாக பெயர்ப்பலகைகளில் 3 மொழிகளில் எழுதி வைத்துள்ளனர். அதை தமிழ்நாட்டில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இந்தி அழிப்பு போராட்டம் என்பதை கையில் எடுத்து தார் பூசி அழித்துள்ளனர். திருப்பூரிலும் இதுபோல் நடந்துள்ளது.

போலீசில் புகார்

வடமாநிலங்களில் இருந்து இங்கு வியாபாரத்துக்கு வருபவர்கள் நிலைமை என்னவாகும். இது முட்டாள்தனமான போராட்டம். இந்தி திணிப்பு எதிர்ப்பு வேறு. அரசாங்கம் எழுதி வைத்திருந்த பெயர்ப்பலகையில் இந்தியை அழிப்பது என்பது வேறு. இது சம்பந்தமாக யார் மீதும் இதுவரை காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. பொதுப்பணித்துறையோ, நெடுஞ்சாலைத்துறையோ போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்படும்.

தொடர்ந்து தார் பூசி இந்தி எழுத்துக்களை அழித்தால் எங்கெல்லாம் பெரியார் சிலை இருக்கிறதோ, அங்கெல்லாம் நாங்கள் ‘கடவுள் இல்லை’ என்ற வாசகங்கள் மீது தார் பூசி அழிப்போம்.

இந்துத்துவா அரசியல்

தமிழகத்தில் நிலவி வரும் இந்த மோசமான அரசியல் கலாசாரம், திராவிட இயக்கங்கள் தமிழகத்துக்கு செய்த தீங்கு. இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி கொடுத்த பரிசு, டாஸ்மாக் அரசியல், மணல் கொள்ளை அரசியல், சினிமா அரசியல், சாதி அரசியல் என்பது தான். திராவிட இயக்க அரசியலை புறக்கணிக்க வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இந்து மக்கள் கட்சியில் வந்து இணையுங்கள். இந்துத்துவா அரசியல் புரட்சியை ஏற்படுத்துவோம். மோடி ஆட்சி இங்கு வர வேண்டும்.

கோவை குண்டு வெடிப்பு தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தனியரசு எம்.எல்.ஏ. பேசி இருக்கிறார். அவருக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்