விக்கிரவாண்டி அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கும் பணி
விக்கிரவாண்டி அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தான் விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கிறது. இந்த பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 30–ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால் பருவமழை போதிய அளவில் பெய்யாமல் பொய்த்து போனது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான வயல்களில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பராமரித்து வந்த பயிர்கள் கருகியதால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மன வேதனையில் விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியில் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வுஅந்த வகையில் விக்கிரவாண்டி ஒன்றியம் பொன்னங்குப்பம், ஆசூர், சாத்தனூர், மேலக்கொந்தை ஆகிய ஊராட்சிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் சுப்பிரமணியன் நேற்று பயிர்கள் கணக்கெடுக்கும் பணியை பார்வையிட்டார். பின்னர் கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
கணக்கெடுப்பு பணிஅப்போது அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயிர் சேதங்களை துல்லியமாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் ஒன்றுசேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது விக்கிரவாண்டி தாசில்தார் அருங்குளவன், துணை தாசில்தார் ஆனந்தகுமார், வருவாய் ஆய்வாளர் ஹாஜீதாஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.