விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-12 22:15 GMT
சொட்டு நீர் பாசனம்

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக சிறு குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் நிறுவிட 100 சதவீத மானியத்தில் எக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் மூலம், குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்ய உதவும் உன்னத திட்டமான நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் 40 முதல் 50 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016–17–ம் நிதியாண்டில் இந்த திட்டத்தின்கீழ் 162.21 எக்டேர் பரப்பளவில் ரூ.112 லட்சம் மதிப்பிலான மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, மாவட்டத்தில் விவசாயிகள் காய்கறி, பயிர்கள், மலர், மிளகாய், தென்னை, பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் நிறுவிட தமிழ்நாடு அரசின் இம்மானிய உதவித்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆவணங்கள்

இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடும்ப அட்டை நகல், சாகுபடி அடங்கல், பட்டா, நில வரைபடம், சிறு குறு விவசாயிகளாக இருப்பின் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட அதற்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குனரை 94869 44700 என்ற எண்ணிலோ, தோட்டக்கலை துணை இயக்குனர் 89038 51830 எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்