கேரள எல்லையில் காட்டு யானை மிதித்து தொழிலாளி சாவு

கேரள எல்லையில் காட்டு யானை மிதித்து தொழிலாளி சாவு தமிழக எல்லைக்குள் நுழைந்து வாகனங்களை சேதப்படுத்தியது

Update: 2017-02-12 22:00 GMT
தொழிலாளியை கொன்றது

கேரள மாநிலம் மற்றும் பந்தலூர் தாலுகா இணையும் சந்திப்பில் குழிமாரி கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாகப்பன் (வயது 45) அதே பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் குறுமிளகு பறிக்கும் பணியில் நேற்று காலை 8 மணிக்கு ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு காட்டு யானை அப்பகுதியில் வந்தது. இந்த சமயத்தில் நாகப்பன் அந்த வழியாக நடந்து சென்றார். அவரை காட்டு யானை துதிக்கையால் பிடித்து இழுத்தது. பின்னர் காலில் போட்டு மிதித்தது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

காட்டு யானையின் திடீர் தாக்குதலை கண்ட அப்பகுதி மக்கள் அம்பலவயல் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனச்சரகர் அரிச்சந்திரன், வனவர் ஜீவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

தமிழக எல்லைக்குள் நுழைந்தது

பின்னர் நாகப்பனின் உடலை போலீசார் கைப்பற்றி அம்பலவயல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதனிடையே கூலி தொழிலாளி நாகப்பனை மிதித்து கொன்ற காட்டு யானை தமிழக எல்லையான தாளூர் வெட்டுவாடி பகுதிக்கு ஆக்ரோ‌ஷமாக நுழைந்தது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை மிதித்து சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பீதியும் நிலவியது.

இதையொட்டி வனச்சரகர்கள் கணேசன், மனோகரன், வன காப்பாளர்கள் பிரகாஷ், ஜெயக்குமார், ராஜேஷ்குமார், ராமச்சந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானை ஆவேசத்தில் வனத்துறையினரை விரட்டியது.

ஆட்டோ சேதம்

பின்னர் பொதுமக்களின் உதவியுடன் காட்டு யானை விரட்டப்பட்டது. இதையடுத்து, அந்த காட்டு யானை வெட்டுவாடி, மாங்கோடு, நம்பியார்குன்னு, மதுவந்தால் பகுதிக்குள் வந்தது. அங்கு அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரின் வீட்டை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர். பின்னர் வெள்ளேரி கிராமத்துக்குள் சென்ற காட்டு யானை அங்கு நிறுத்தி வைத்திருந்த கேரள பதிவு எண் கொண்ட ஆட்டோவை மிதித்து சேதப்படுத்தியது. மேலும் வனத்துறையினரும் காட்டு யானையை பின்தொடர்ந்து வந்ததால் பாட்டவயல் சோதனைச்சாவடி அருகே வந்தது. அப்போது வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் காட்டு யானை வருவதாக அறிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் சென்று பதுங்கி கொண்டனர். பின்னர் அப்பகுதியில் சிறிது நேரம் முகாமிட்ட காட்டு யானை முதுமலை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்