சீதோஷ்ணநிலை காரணமாக நீலகிரியில் தேயிலை மகசூல் குறைவடைந்து உள்ளது உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவும் சீதோஷ்ணநிலை காரணமாக தேயிலை மகசூல் குறைவடைந்து உள்ளதாக உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு தெரிவித்தார்.

Update: 2017-02-12 21:45 GMT
தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குன்னூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருந்து வருகிறது. இதன்காரணமாக தேயிலை மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிதமான மற்றும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தேயிலை செடிகள் பசுமைக்கு திரும்பின. ஆனால் தற்போது கடும் வெயில் அடித்து வருவதால் தேயிலை செடிகள் மீண்டும் வறட்சி நிலைக்கு திரும்பி உள்ளது.

தேயிலை சாகுபடியில் ஒரு அம்சமாக நுண்ணூட்ட சத்துகள் செடிகளுக்கு மேல் தெளிக்கப்படுவது வழக்கம். இந்த நுண்ணூட்ட சத்துகள் தெளிப்பதால் செடிகளில் நீர்சத்து வெளியேறுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வறட்சி காலங்களில் நுண்ணூட்ட சத்துகள் தெளிக்க உபாசி தேயிலை ஆராய்ச்சி மையம் பரிந்துரை செய்து வருகிறது. இதுகுறித்து உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு கூறியதாவது:–

மகசூல் குறைவு

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவும் சீதோஷ்ணநிலை காரணமாக தேயிலை மகசூல் குறைவடைந்து உள்ளது. தேயிலை செடிகளில் இருந்து நீர்சத்து ஆவியாவதை தடுக்க நுண்ணூட்ட சத்து தேயிலை செடிகளில் தெளிக்க வேண்டும். மகசூல் குறைவடைந்த தோட்டத்தில் எம்.ஓ.பி. உரம் 3 கிலோ, யூரியா உரம் 2 கிலோ ஆகியவற்றை 300 அல்லது 400 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும். மகசூல் கிடைக்கும் தோட்டத்தில் 3 கிலோ பொட்டாசியம் நைட்ரேட்டுடன் 2 கிலோ யூரியா கலந்து 300 அல்லது 400 லிட்டர் தண்ணீரில் ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும். இந்த நுண்ணூட்ட மருந்தை பச்சை தேயிலை பறித்த பின்பு மாதத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

கடந்த 2016–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு ஹெக்டேருக்கு 800 கிலோ பச்சை தேயிலை மகசூல் கிடைத்தது. ஆனால் நடப்பு ஆண்டில் 600 முதல் 650 கிலோ வரை மட்டுமே பச்சை தேயிலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்