பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள், சிதறிய வீரர்கள்
உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகளிடம் சிக்கிய 21 பேர் காயம் அடைந்தனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் ஏழைகாத்தம்மன், வல்லடிகாரன் சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நடக்கவில்லை. தடை நீங்கியதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடத்தப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டுக்காக பல்லவராயன்பட்டியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு, போட்டி நடைபெறும் தெருவின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் பங்கேற்க தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 234 காளைகள் பங்கேற்றன. காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
பந்தாடிய காளைகள்அதேபோன்று இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 475 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மஞ்சள் நிறத்தில் சீருடை வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
காலை 9.10 மணியளவில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டு, ஜல்லிக்கட்டு தொடங்கியது. அதன்பிறகு வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு என்பதால் இதனை காண்பதற்கு மக்கள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
பார்வையாளர்களின் கரகோஷம், விசில் சத்தத்திற்கு இடையே காளைகள் வாடி வாசலில் இருந்து வெளியே வந்தன. சில காளைகள் வந்த வேகத்தில் வெளியே ஓடின. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. ஏராளமான காளைகள் களத்தில் நின்று விளையாடின. சில காளைகள் வாடிவாசலில் இருந்து வெளி வந்த வேகத்தில் ஓடிவிடாமல், களத்தில் நின்று வீரர்களை நாலாபுறமும் சிதறவிட்டு பந்தாடின.
21 பேர் காயம்காளையர்களும் சளைக்காமல், காளைகளோடு மல்லுக்கட்டி பரிசுகளை அள்ளினர். வீரர்களை பந்தாடிய காளைகளுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுப் பொருட்களாக தங்க நாணயம், வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, மெத்தை, பீரோ, மின்விசிறி, மிக்சி, சைக்கிள், ரொக்கப்பணம் போன்றவை வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகளிடம் சிக்கி தேனி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 19), மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ஜெகதீஸ்குமார் (30), அலங்காநல்லூரை சேர்ந்த பிரசாத் (29), திருமங்கலத்தை சேர்ந்த ஜெயபாண்டியன் (29), திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியை சேர்ந்த பூமிநாதன் (27) உள்ளிட்ட 21 பேர் காயம் அடைந்தனர். இதில், 6 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேடை சரிந்ததுநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்களும் பார்வையிட்டனர். சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடந்து கொண்டு இருந்த போது, ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் போராடிய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிராம கமிட்டி சார்பில் நன்றி கூறப்பட்டது.
ஜல்லிக்கட்டு மாடுகள் வெளியேறும் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு பார்வையாளர் மேடை திடீரென சரிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேடை சரிவதை பார்த்ததும் பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் ஓடிச் சென்று மேடையில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.