தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை: அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு கவர்னர் முடிவு எடுப்பார் முன்னாள் கவர்னர் பேட்டி
தமிழக அரசியலில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு கவர்னர் முடிவு எடுப்பார் என்று தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா கூறினார்.
தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றுக்காலை கோவை வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தமிழகத்தில் ஆட்சி அமைக்க சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதில் கவர்னர் முடிவு எடுக்க காலதாமதம் செய்வதாக கூறப்படுகிறதே?
முடிவு எடுப்பார்பதில்:– தற்போது நான் கவர்னராக இல்லை. தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தற்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் முடிவு எடுப்பதில் அவசரம் காட்ட மாட்டார். அவர் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு முடிவு எடுப்பார். இன்று அல்லது நாளை மாலைக்குள் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். மக்களை போன்று தான் நானும் அவர் என்ன முடிவு எடுப்பார் என்று காத்திருக்கிறேன்.
கேள்வி:– அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதியில் தங்க வைத்து உள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்:– இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.