காற்றுக்கு ஏன் பெயர்!
காற்றில்லாமல் உயிரில்லை, சுவாசமில்லை, குளிர்ச்சியில்லை. காற்றின் மூலமே ஒலிகள் காதுகளை அடைகின்றன. காற்று பலமாய் அடிக்கும் இரவில் ஒரு துளி வாசனை திரவம் அரங்கத்தையே அசத்தும்.

வீசுகிற வேகத்தைப் பொறுத்தே காற்றைத் தரம் பிரிக்கிறோம். மென்மையாய் வந்து பூக்களில் மேனியைத் தடவும்போது மொட்டுகள் யாவும் கொட்டாவி விட்டு மலர்கின்றன. அதுவே வேகமாய் வந்தால் இருக்கும் பூக்களை உதிர்த்துவிட்டுச் செல் கிறது. கோபமாய் அடித்தால் செடியையே ஒடித்து விடுகிறது.
தமிழ் இலக்கியத்தில் வீசும் திசையைப் பொறுத்து காற்றுக்குப் பெயர் வைத்தார்கள். தெற்கில் வீசினால் தென்றல், வடக்கிலிருந்து வீசினால் வாடை, கிழக்கில் கொண்டல், மேற்கில் கோடை.
வீசுகிற காற்று வெட்டவெளியிலா, வயல்வெளியிலா என்பதைப் பொறுத்து பல்வேறு இடங்களில் அவற்றிற்குப் பலவிதப் பெயர்கள். பனிமுகடுகளில் வீசும் காற்று நம்மையே மூடிவிடும். பாலைவனத்தில் எழும் சூறாவாளி உடலின் துவாரங்கள் அனைத்திலும் மண்ணைத் தூவும்.
புயலுக்குப் பின் இயற்கையில் அமைதி இருக்கலாம்; ஆனால் இதயத்தில் இருப்பதில்லை. உதிர்ந்த உயிர்கள், அதிர்ந்த கட்டிடங்கள், இடிந்த இல்லங்கள், நொடிந்த குடும்பங்கள், நொறுங்கிய வாகனங்கள், உடைந்த பாலங்கள், தகர்ந்த சாலைகள் என்று சேதப்பட்டவற்றைக் காணும்போது, நமக்குள் வீசும் சூறாவளி எளிதில் அடங்குவதில்லை.
அண்மையில் சென்னையை உலுக்கிவிட்டுச் சென்றது ‘வர்தா’ என்னும் புயல். காதுகளில் வந்து கிசுகிசுக் கும் காற்று இப்படி இரக்கமின்றி அரக்க அவதாரம் எடுக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள்!
சாலை முழுவதும் மரங்களாய்க் கிடந்தன. நம் ஊரின் பசுமையே பாதி பறிபோனதைப்போல பரிதாபம்.
குப்புறக்கிடந்த மரங்களை அப்புறப்படுத்தவே அதிகக்காலம் தேவைப்பட்டது என்றால், அவை வளர்வதற்கு எத்தனை ஆண்டுகள் ஏற்பட்டிருக்கும்!
விழுந்தவை எல்லாம் இளைய மரங்கள் அல்ல. பெரும்பாலும் நெட்டை நெடுமரமாய் வளர்ந்து நின்றவை. திருமலைநாயக்கர் மகால் தூண்போல திரண்டு நின்றவை.
மரங்கள் விழுந்தன என்பதோடு புள்ளிவிவரம் நின்றுவிடும். பசுமை குறைந்தது என்பதோடு சுற்றுச்சூழல் சுருங்கிவிடும். அப்புறப்படுத்தியதில் ஆன செலவோடு கணக்கு வழக்கு நிறைவுபெற்றுவிடும்.
ஏன் விழுந்தன இம்மரங்கள்! திடமாகவும் திண்மையாகவும் பூமிக்குள் கால் நுழைத்து, விண்ணிலே கிளைபரப்பி நின்ற இவை சாய்ந்தன, சரிந்தன, மாய்ந்தன, மடிந்தன. ஆனால் இத்தனைக் காற்றிலும் மெல்லிய சிறகு கொண்ட பட்டாம்பூச்சிகள் பழுதுபடாமல் பறக்கின்றனவே! எதைச் சுட்டுகிறது இந்த நிகழ்வு!
ஓரிடத்திலேயே எப்போதும் தங்கிவிடுபவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் சரிந்துவிடுவார்கள். பறந்து திரிகிறவர்களே, பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள்.
விழுந்த மரங்களில் பெரும்பான்மையானவை வெளிநாட்டு மரங்கள். அவை வேகமாய் வளரும். அவற்றில் பழங்கள் இருப்பதில்லை. காய்கள் காய்ப்பதில்லை. ஆனால் கொத்துக்கொத்தாக வாசமில்லாத மலர்கள் பூத்துக் குலுங்கும். அவற்றின் அடிமரம் வெறும் தடிமரம். அவற்றால் எந்தப் பயனும் இல்லை. அவை உறிஞ்சும் கரியமில வாயுவின் அளவும் சொற்பம்.
சிரமப்படாமல் சிகரம் அடைய நினைப்பவர்கள் நாம். எனவே விரைவாக வளரும் மரங்களையே வீட்டின் முன் நட்டு வைத்தோம். நட்டு வைத்ததை எல்லாம் காற்று விட்டு வைத்து விடுமா! எது வேகமாக வளர்கிறதோ அது வேகமாக விழும் என்பதையே இந்த அந்நிய மரங்கள் நமக்குச் சொல்லும் கண்ணியமான சேதி.
மண்ணுக்கான மரங்கள் நம்மிடம் அதிகம். அவை வாழைபோல் வளராமல், தாழைபோல் தழைக்காமல், ஆலம்போல் மெதுவாகவே வளரும். அவற்றின் நிழல் பலருக்கும் கூடாரமாக இருக்கும். அம்மரங்களின் மலர்களில் மருத்துவ குணம் இருக்கும். கிளைகளை ஒடித்தால் பல்குச்சியாகப் பயன்படும். அவற்றின் அடிமரங்கள் நூற்றாண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் கதவுகளாகும்.
அவற்றின் பழங்கள் பறவைகளுக்குப் பந்தி வைக்கும். அவற்றின் இலைகள் பசுக்களுக்குத் தீவனமாகும். அங்கு மழை வரும்போது குடையில்லாமல் ஒதுங்கலாம். ஊரே கூடி பிரச்சினைகளைப் பேசலாம்.
அவை வாகனங்கள் கக்கும் புகையை உறிஞ்சும். தொழிற்சாலைகள் விடும் வாயுவை விழுங்கும். அவற்றின் அடியில் தட்பவெப்பம் கணிசமாய்க் குறையும். இயற்கை அளித்த குளிர்சாதனப் பெட்டியாய் அவை நம்மைக் குளிர்விக்கும்.
மண்ணுக்கான மரங்கள் ‘உடனடி இடியாப்பமாய்’ இருப்ப தில்லை. அவை தாய் தயாரித்துப் பரிமாறும் பலகாரமாய், நேரமானாலும் நெஞ்சை நிறைக்கும்.
காற்று வந்து மோதினால், அன்று விடுதலைக்காகப் போராடிய இந்திய இளைஞர்கள்போல் அவை எதிர்த்து நிற்கும். அவற்றிற்குத் தெரியும், அவற்றின் வாழ்வு ஓராயிரம் உயிர்களையும் உள்ளடக்கியது என்று.
நம் மண் சார்ந்த மரங்களின் அருகில் இரவு நேரத்தில் சென்றால் எத்தனை உயிர்களுக்கு அவை விடுதியாக இருக்கின்றன என்பது தெரியும். வண்டுகளின் ஓசை, பறவைகள் அடையும் ஒலி என்று அம்மரங்களே வனங்களின் பிரதிநிதியாய் இருக்கும்.
இனிமேலாவது புயலுக்குத் தாக்குப்பிடிக்கும் மரங்களைத் தூக்கிப்பிடிப்போம்.
விழுந்து கிடந்த மரங்கள் வெறும் கட்டைகள் மட்டும்தானா! அவை எத்தனை சம்பவங்களைத் தங்கள் கிளைகளில் முடிந்து வைத்திருந்தன என்பது யாருக்குத் தெரியும்.
வழிதவறி வந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நினைவுகளை, வீட்டுக்குத் தெரியாமல் அவற்றின் கீழே அமர்ந்து அன்பாய்ப் பேசிய காதலர்களின் ரகசியங்களை, அன்றாடம் அவற்றின் நிழலில் கடைவிரித்த எளியவர்களின் எதிர்பார்ப்புகளை அவை யாரிடமும் பகிராமல் சென்றுவிட்டனவே!
இம்மரங்களில் வாழ்ந்த பறவைகள் எங்கு சென்றன! அவை அந்தக் கோரக் காற்றின்போது எங்கு சென்று தப்பித்தன!
மாற்றல் ஆணை வந்தால் பயணப்படியோடு செல்வதற்கே கண்ணைக் கசக்குகிற நமக்கு அவற்றின் கண்ணீரின் கனம் தெரியுமா!
இந்த மரங்கள் ஒவ்வொன்றிற்கும் எத்தனை ஆசை இருந்திருக்கும்! எந்த மரமாக இருந்தாலும் வாழும் வரை வளர்ந்தால்தான் அவை மரம்; இல்லாவிட்டால் பட்டமரம், வெறும் கட்டைமரம். அவை வாழ்ந்ததற்குப் பின்பு கட்டிலாகவோ, தொட்டிலாகவோ உருமாறுவதற்குக் கனவு கண்டிருக்கும். ஆனால் ஒரு சவப்பெட்டியாகக்கூட ஆகாமல் அவையே சவமாகி விட்டனவே!
மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப்போய் இருக்கிறது. நம்மிலும் பலருக்கு அடைக்கலம் கொடுத்த அவற்றின் மரணம் பல சோகக் காவியங்களின் சொற்சித்திரம் என்பதே ‘வர்தா’ அழுத்தம் திருத்தமாய்ச் சொன்ன சேதி.
மனிதர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தும் நாம் மரங் களுக்காகவும் செலுத்துவோம்.
(சேதிகள் தொடரும்)