கல்லில் உருவாகி காலத்தை வெல்லும் காதல்

காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள், பிரான்ஸ் நாட்டுப் பெண் கேப்ரியேலும்- மாமல்லபுரத்து சீனிவாசனும்! இவர்கள் காதலர்கள் இல்லை, கருத்தொருமித்த தம்பதிகள்.

Update: 2017-02-12 06:53 GMT
காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள், பிரான்ஸ் நாட்டுப் பெண் கேப்ரியேலும்- மாமல்லபுரத்து சீனிவாசனும்! இவர்கள் காதலர்கள் இல்லை, கருத்தொருமித்த தம்பதிகள். காதலித்து, திருமணம் செய்து, மூன்று குழந்தைகளை பெற்றுக்கொண்டாலும் இவர்களுக்குள் இருக்கும் காதல் உணர்வு வற்றிப்போகவில்லை. அதனால்தான் இப்போதும் காதலர் தினம் கொண்டாடும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இவர்கள் காதல் வாழ்க்கை, கல்லில் வடித்த சிற்பம்போல் அழகாக, நிலையாக இருக்க- இவர்கள் காதல் சிற்பக்கூடத்தில் உருவானதுதான் காரணமாக இருக்கலாம். கலைதான் இவர்கள் இருவரையும் அன்பில் கட்டிப்போட்டிருக்கிறது. சீனிவாசன் மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக்கல்லூரியில் கற்சிற்ப வடிவமைப்பு பிரிவில் பி.எஸ்சி. பட்டம் பெற்றவர்.

இவர்கள் சந்திப்பு எங்கே? எப்படி நடந்தது?

கேப்ரியேல்: “உலகப்புகழ் பெற்ற மாமல்லபுரத்து சிற்பங்களை கண்டுரசிக்க, உலகம் முழுக்க உள்ள சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அப்படித்தான் நானும் 13 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்திற்கு வந்தேன். இங்கு தங்கியிருந்தேன். இங்குள்ள ஏராளமான கூடங்களில் சிற்பிகள் சிலை வடித்துக்கொண்டிருந்தார்கள். நானும் ஒன்றன்பின் ஒன்றாக பார்த்துக்கொண்டே சென்றேன். சீனிவாசன் அருகில் சென்றதும் நான் பிரமித்துவிட்டேன். அவர் அழகழகான சிறிய சிலைகளை அற்புதமாக வடிவமைத்து என் மனதை அப்படியே ஈர்த்துவிட்டார்.

உடனே அவரிடம் சென்று, ‘நீங்கள் அற்புதமாக சிலை வடிப்பதை பார்த்து, எனக்கும் இதில் ஆர்வம் வந்துவிட்டது. நானும் சிற்பம் வடிக்கவேண்டும். எனக்கும் கற்றுத்தருவீர்களா?’ என்று கேட்டேன். அவரும் உடனே சம்மதித்தார். அன்றிலிருந்து அவரிடம் தினமும் 2 மணி நேரம் பயிற்சி பெற்றேன். அதற்காக அவர் என்னிடம் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. மாவுக்கல்லில் சிற்பம் வடிக்க நான் கற்றுக்கொண்டேன். அவர் என்னிடம் பழகிய முறையும், பண்பும் என்னை கவர்ந்தது.

அவரிடம் எனது மனதை பறிகொடுத்ததால், அவரையே வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, ‘நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று கேட்டேன். சீனிவாசன் யோசித்துக்கொண்டு, அவரது பெற்றோரிடம் பேசிவிட்டு முடிவு சொல்வதாக கூறினார். அவரது பெற்றோர் சம்மதித்த பிறகு, நான் பிரான்சில் உள்ள என் பெற்றோரிடம் சொன்னேன். அவர்களும் சம்மதித்தார்கள். இருதரப்பு குடும்பத்தினரும் கலந்துகொண்ட எங்கள் திருமணம், அவரது குல தெய்வ கோவிலில் 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. மணவிழாவில் கலந்துகொள்ள எங்கள் நாட்டில் இருந்து 50 பேர் வந்திருந்தார்கள்” என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார், கேப்ரியேல்.

(இவர் பிரான்சில் பாரீஸ் நகரை சேர்ந்தவர். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர். அவர்கள் அங்கு சொந்தத் தொழில் செய்து வருகிறார்கள். கேப்ரியேல் படித்து முடித்துவிட்டு அங்கு சமூக சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்)

கேப்ரியேல் தொடர்கிறார்:

“திருமணம் முடிந்ததும் 2 மாதங்கள் மாமல்லபுரத்தில் உள்ள என் மாமியார் வீட்டில் தங்கியிருந்தோம். குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் பிரியமாக நடந்துகொண்டார்கள். பின்பு சீனிவாசனும் என்னோடு பிரான்ஸ்க்கு வந்துவிட்டார். அங்கு எங்கள் மணவாழ்க்கையை தொடங்கினோம். அவர் அங்கிருந்தபடியே சிற்பத் தொழிலை செய் கிறார். இணையதளம் மூலம் ஆர்டர் பெற்று, சிற்பம் வடிக்கிறார். அதற்கான கற்கள் எங்கள் நாட்டிலேயே கிடைக்கிறது. சீனிவாசன் தனி நபராக இந்த கலைத்தொழிலை செய்துகொண்டிருக்கிறார்.

முதலில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அடுத்த வருடம் இன்னொரு பெண் குழந்தைக்கும், பின்பு ஒரு ஆண் குழந்தைக்கும் தாயானேன். மூத்த மகள் எத்தேல் ஆனந்திக்கு 10 வயது. 6-ம் வகுப்பு படிக்கிறாள். இளைய மகள் ஏவா சந்தரா 4-ம் வகுப்பும், மகன் காபான்சுனந்தன் 1-ம் வகுப்பும் படிக்கிறார்கள். நாங்கள் நிரந்தரமாக பிரான்சிலேயே தங்கிவிட்டதால் எங்கள் குழந்தைகளுக்கு தமிழ்வழி மூலம் கல்வி கற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் பிரெஞ்சு மொழியிலே கல்வி கற்கிறார்கள்” என்று கூறும் கேப்ரியேல் ஓரளவு தமிழ் பேசுகிறார். சீனிவாசன் பிரெஞ்சு மொழியில் நன்றாக தேர்ச்சிபெற்றுள்ளார். இவர்கள் பாரீசில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள சாம்ரீவ் என்ற நகரில் வசித்து வருகிறார்கள்.

தமிழக மக்களிடம் கேப்ரியேலுக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

“மேற்கத்திய கலாசாரத்தில் இருந்து தமிழக கலாசாரம் மாறுபட்டுள்ளது. இங்குள்ள மக்கள் குறிப்பிட்ட வரையறைக்குள் வாழ்ந்து வருகிறார்கள். அனைவரையும் மதித்து நடக்கின்றனர். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இங்குள்ள கிராம பெண்கள் மிகுந்த கட்டுப்பாட்டோடு வாழ்ந்து வருகிறார்கள். எங்கள் நாட்டில் ஒரு குடும்பத்தை சேர்ந்த பலரும், பல இடங்களில் வசிப்பார்கள். பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள். வருடத்தில் ஒரு முறை அல்லது இரு முறைதான் சந்திப்பார்கள். இங்குள்ளவர்களை போன்று நெருக்கமாக உறவுகளை பேணமாட்டார்கள்.

உணவுப் பழக்கத்தை பொறுத்தவரையில் எனக்கு மாமியார் வீட்டில் இட்லி, தோசை, பூரி, வடைகறி போன்ற சுவையான உணவுகள் கிடைக்கிறது. விரும்பி சாப்பிடுகிறேன். பிரான்சிலும் சீனிவாசனுக்காக சப்பாத்தி, தோசை தயார் செய்து கொடுப்பேன். அவரும் எனக்கு சமையலில் உதவுவார். நாங்கள் பாரீஸ்க்கு செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் இந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுவோம்” என்றார்.

மாமல்லபுரம் வந்து கலையையும், காதலையும், கணவரையும் கண்டெடுத்த இவருக்கு பிரான்சில், இது போன்ற சிற்பங்கள் இல்லை என்ற குறை இருக்கிறது.

“மாமல்லபுரத்தில் கடற்கரைகோவில், ஐந்துரதம் ஆகிய சிற்பங்களில் என் மனதை பறிகொடுத்திருக்கிறேன். ஐந்து ரதத்தில் உள்ள யானை, சிங்கம், நந்தி போன்றவை தத்ரூபமானவை. உலகில் வேறெங்கும் இதுபோன்ற சிற்பங்களை பார்க்க முடியாது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் கலை ஆர்வம்கொண்டவர்கள். ஆனால் இதுபோன்ற புராதன சிற்பங்களை அங்கு காணமுடியாது. இந்தியாவில் மட்டுமே இதுபோன்ற சிற்பங்களை அதிகளவில் காணமுடிகிறது. தற்போது இந்தியர்கள் பிரான்சில் பெருமளவு குடியேறி வரு கிறார்கள். அதனால் அங்கு அதிக அளவில் இந்து கோவில்கள் கட்டப்படுகின்றன. வார விடுமுறை தினங்களில் சீனிவாசன் அங்குள்ள அம்மன் கோவிலுக்கு எங்களை அழைத்து செல்வார். நான் அங்கு வழிபாடு செய்வேன். எங்கள் வீட்டிலும் சாமி படங்கள் உள்ளன. குழந்தைகளுக்கும் சாமி கும்பிட சொல்லிக் கொடுக்கிறேன். இந்தியர்களின் கடவுள் நம்பிக்கையை நான் பலமுறை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்” என்றார்.

காதலர் தினத்தை இந்த ஆண்டு மாமியார் வீட்டில் கொண்டாட கேப்ரியேல் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

“காதலர் தினம் எங்களைப் போன்று காதல் திருமணம் செய்தவர்களுக்கு உற்சாகமான நாள். இந்தியாவிலும், பிரான்சிலும் காதலர் தின கொண்டாட்டத்தில் பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லை. அங்கும் காதலர்கள் பரிசு பொருட்களை தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். காதலர் தினத்தை கொண்டாட பிரான்சிலும் சில கட்டுப்பாடுகள் உண்டு. எல்லைமீறக்கூடாது. பொது இடங்களில் எல்லைமீறும் காதலர்களை போலீசார் எச்சரிப்பார்கள்.

நாங்கள் காதலர் தினத்தை வருடந்தோறும் கொண்டாடுகிறோம். முன்பு சீனிவாசன் எனக்கு காதல் பரிசாக மார்பிள் கல்லில் வடிவமைக்கப்பட்ட சிலையினை வழங்கினார். பதிலுக்கு நான் பிரான்ஸ் கம்பளியால் நெய்யப்பட்ட ஸ்வெட்டரையும், கடிகாரத்தையும் அன்புப் பரிசாக கொடுத்தேன். இந்த ஆண்டும் பரிசுகளை பரிமாறிக்கொள்வோம். நான் அவருக்கு கொடுக்கப்போகும் பரிசை ரகசியமாக வைத்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் சிறந்த காதல் பரிசு, காதலர்கள் திருமணம் செய்துகொண்டு வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வதுதான். காதல் தம்பதிகள் ஒளிவு மறைவற்ற, ரகசியமற்ற வாழ்க்கை வாழவேண்டும். மேற்கத்திய கலாசார வாழ்க்கை எனக்கு பிடிக்காது. அங்கு பலர் பொழுதுபோக்குக்கு திருமணம் செய்துகொண்டு, பிறகு கருத்துவேறுபாடுகளுடன் பிரிந்துவிடுவார்கள். இங்கு திருமண வாழ்க்கை வெகுகாலம் நீடிக்கிறது. எனக்கும் இந்த வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது. அதனால்தான் மூன்று குழந்தைகளை பெற்று வளர்த்து, நாங்கள் இருவரும் எந்த நாடு, எந்த மொழி என்று பாராமல் மனம் ஒன்றுபட்டு வாழ்கிறோம். எங்கள் காதல் கல்லில் வடித்தது. காலத்தால் அழியாதது” என்று நெகிழ்ச்சியுடன் கூறிய கேப்ரியேல், இந்திய தாய்மார்கள் போன்று பிள்ளைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறார். இந்த மாத இறுதியில் பிரான்ஸ் செல்லும் அவர், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார். பாட்டி ஆண்டாளம்மாள் குழந்தைகளை அவ்வப்போது உச்சி முகர்ந்து ரசிக்கிறார். அழகாக இருக்கும் அந்த குழந்தைகள் “எங்களுக்கு இந்தியா ரொம்ப பிடிச்சிருக்கு. இது எங்க அப்பா நாடு. அன்பான நாடு..” என்கிறார்கள்.

மேலும் செய்திகள்