வேலூர் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 160 சத்துணவு அமைப்பாளர், 948 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-12 00:19 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 160 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 948 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். இதற்கு வருகிற 28–ந் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் விண்ணப்பிக்க முடியாது. இதற்கான விண்ணப்பங்கள் வேலூர் மாநகராட்சி அனைத்து நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 28–ந் தேதி வரை அலுவலக நாட்களில் வழங்கப்படும்.

காலிப்பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்படும். அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இன சுழற்சி முறை பின்பற்றப்பட மாட்டாது.

வேலூர் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளருக்கு 160 பணியிடங்களும், சத்துணவு உதவியாளருக்கு 948 பணியிடங்களும் காலியாக உள்ளன.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கான தகுதிகள் விவரம் வருமாறு:–

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி) பிரிவை சேர்ந்தவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் 1.12.2016 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் (எஸ்.டி) இனத்தை சார்ந்தவராக இருந்தால் 8–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும். 1.12.2016 அன்று அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட பிரிவினரில் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 1.12.2016 அன்று 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணியிடங்கள்

சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கான தகுதிகள் விவரம் வருமாறு:–

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) பிரிவை சேர்ந்தவர்கள் 5–ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும். 1.12.2016 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பழங்குடியினர் (எஸ்.டி) இனத்தை சேர்ந்தவராக இருந்தால் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 1.12.2016 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட பிரிவினரில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 1.12.2016 அன்று 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

2 பதவிகளுக்கும் நியமன பணியிடத்துக்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மனுதாரரின் புகைப்படம் மற்றும் கல்வி மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, சாதி, இருப்பிடம், வருமானம், குடும்பஅட்டை, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான தாசில்தார் சான்று, ஆதரவற்ற விதவை எனில் வருவாய் கோட்ட அலுவலர் சான்று நகல் இணைப்புகளுடன் வருகிற 28–ந் தேதி அன்று மாலைக்குள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது வேலூர் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். அதன்பின்பு விண்ணப்பங்கள் வழங்கப்படவோ, பெறப்படவோ மாட்டாது.

28–ந் தேதி மாலைக்குள்..

மேலும் விவரங்களுக்கு ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

வருகிற 28–ந் தேதி அன்று மாலை வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே உரிய பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தகுதி வாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்