தனியார் தங்கும் விடுதியில் வார்டனை மாற்றக்கோரி மாணவர்கள் தர்ணா
தனியார் தங்கும் விடுதியில் வார்டனை மாற்றக்கோரி மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
வேலூர்,
தனியார் தங்கும் விடுதியில் வார்டனை மாற்றக்கோரி மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை அமர்ந்து தர்ணாவேலூர் மாநகராட்சி அருகே தனியார் அறக்கட்டளையின் சார்பில் இலவச தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சேர்ந்த சுமார் 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சாலையில் 30 மாணவர்கள் அமர்ந்து திடீரென தர்ணா செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் தெரிந்ததும் வேலூர் தெற்கு போலீசார் அங்கு வந்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் மாணவர்கள் கூறியதாவது:–
இந்த விடுதியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு கடந்த 8–ந் தேதி சென்றோம். மறுநாள் காலையில் விடுதிக்கு வந்த போது விடுதி வார்டன் நீங்கள் யாரிடம் கூறிவிட்டு சென்றீர்கள் என்று கூறி எங்களுக்கு உணவு வழங்க மறுக்கிறார். இதனால் 2 நாட்களாக நாங்கள் சாப்பிடவில்லை. மேலும் விடுமுறை நாட்களில் எங்களை பார்க்க வரும் பெற்றோரை உள்ளே விடுதி அறைக்குள் அனுமதிக்க மறுக்கிறார். வாசலுக்கு வெளியே பெற்றோரை நிறுத்துகிறார். மேலும் மாணவர்களை தரக்குறைவாக பேசுகிறார். வாரவிடுமுறை நாட்களில் அறைகளை பூட்டி விடுவதால் நாங்கள் வெளியில் உள்ள மரத்தடியில் தங்க வேண்டியுள்ளது. இந்த வார்டன் பொறுப்பேற்று 6 மாதங்கள் தான் ஆகிறது. இதற்கு முன் இருந்த வார்டன் இதுபோன்று எதுவும் செய்ததில்லை எங்களிடம் அன்பாக பழகுவார்.
வார்டனை மாற்ற வேண்டும்எனவே இந்த வார்டனை மாற்றிவிட்டு முன்னாள் வார்டனை பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறினர்.
இந்த தர்ணாவால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.