நடத்தையில் சந்தேகம்: மனைவி, குழந்தை படுகொலை

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, குழந்தையை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தாக்கப்பட்ட மற்றொரு குழந்தை கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-02-11 23:30 GMT
நடத்தையில் சந்தேகம்

காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை கங்கையம்மன் கோவில் 2-வது குறுக்குதெருவில் வசித்து வருபவர் பாஸ்கர்(வயது 30). இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவரது மனைவி ரூத்(27). இவர்களது மகள் ஜெனிபர் (3), மகன் ராஜா (10 மாதம்). பாஸ்கர் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

சமீப காலமாக பாஸ்கருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த பாஸ்கர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

படுகொலை

இதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து மனைவி ரூத்தை சரமாரியாக தாக்கினார். இதில் ரூத் ரத்த வெள்ளத்தில் சரிந்து, பரிதாபமாக உயிரிழந்தார். போதை தலைக்கேறிய நிலையில் கடும் ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர் தூங்கிக் கொண்டிருந்த தனது 2 குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் 10 மாத ஆண்குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.

பாஸ்கர் வீட்டில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கவலைக்கிடம்

அப்போது வீட்டில் தாயும், 10 மாத ஆண்குழந்தையும் இறந்து கிடப்பதையும், 3 வயது பெண்குழந்தை ஜெனிபர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் உடனடியாக அந்த பெண் குழந்தையை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அந்த குழந்தை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஜெனிபரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கைது

முன்னதாக போலீசார் ரூத் மற்றும் 10 மாத ஆண்குழந்தை ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட துரைப்பாக்கம் உதவி கமிஷனர் அய்யப்பன், இந்த கொலை சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில், செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி மற்றும் குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த பாஸ்கரை நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்