வாலாஜாபாத் அருகே நடந்த வடமாநில தொழிலாளி கொலையில் 3 பேர் கைது

வாலாஜாபாத் அருகே வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2017-02-11 22:45 GMT
வடமாநிலத்தை சேர்ந்தவர்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஓடந்தாங்கல் கிராமத்தில் வயல்வெளியில் கை, கால்கள் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்கவரின் பிணம் கிடந்தது. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என தெரிந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் அருணாசல பிரதேச மாநிலம் லோகித் மாவட்டம் சல்லாங் கிராமத்தை சேர்ந்த குமார்லிம்பு (வயது 35) என்பதும், இவர் ஒரகடம் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிவந்தவர் என்பதும் தெரியவந்தது.

ரூ.3 லட்சம்

இவர் தனது ஊருக்கு கொண்டுசெல்வதற்காக ரூ.3 லட்சம் வைத்திருப்பதாக தன்னுடன் தங்கி பணிபுரியும் நாகாலாந்தை சேர்ந்த குமார்சுப்பா (24), அசாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல்லாமா (21), பிக்ரம்கோய் (23) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அந்த பணத்தை கொள்ளையடிக்க நினைத்த 3 பேரும் குமார்லிம்புவிடம் நைசாக பேசி ஓடந்தாங்கல் பகுதிக்கு அழைத்துவந்து மது குடிக்க வைத்தனர்.

அவருக்கு போதை ஏறியதும் பணம் வைத்திருக்கும் இடத்தை பற்றி கேட்டனர். ஆனால் அவர் பணம் வைத்திருக்கும் இடத்தை தெரிவிக்காததால் குமார்லிம்புவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

3 பேர் கைது

போலீசார் தென்னேரி பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சுற்றித்திரிந்த குமார்சுப்பா, ராகுல்லாமா, பிக்ரம்கோய் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் குமார்லிம்புவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் 3 பேரையும் கைது செய்து காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்