கடையில் ரூ.2½ லட்சம், நிரப்பப்படாத 20 காசோலைகள் திருட்டு
கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம், நிரப்பப்படாத 20 காசோலைகளை திருடி சென்றுள்ளனர்.;
உப்பள்ளி,
உப்பள்ளி டவுனில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மற்றும் நிரப்பப்படாத 20 காசோலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரூ.2½ லட்சம் திருட்டுஉப்பள்ளி டவுன் தேஜ்பாண்டே நகர் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 35). வியாபாரி. இவர் உப்பள்ளி நியூ கார்டன் மார்க்கெட் பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல இரவு கடையை பூட்டி விட்டு முரளிதரன் வீட்டிற்கு சென்றார். வழக்கம்போல் நேற்று காலை முரளிதரன் கடையை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது கடையின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்ததும், கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2½ லட்சம் மற்றும் நிரப்பப்படாத 20 காசோலைகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முரளிதரன் உப்பள்ளி உபநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
வலைவீச்சுஉடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
அதேப் போல் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த ரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்துகொண்டனர். இதுகுறித்து உப்பள்ளி உபநகர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.