தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது: கி.வீரமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க அழைப்பதில் தாமதம் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது: கி.வீரமணி குற்றச்சாட்டு

Update: 2017-02-11 22:00 GMT
கோவை,

தமிழக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் அழைக்காமல் தாமதம் செய்வதன் மூலம், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு சூழ்ச்சி செய்வது தெரிகிறது என்று கி.வீரமணி குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு சூழ்ச்சி

கோவையில் நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது. மெஜாரிட்டி யாருக்கு என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டசபையை கூட்ட கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யாமல் கவர்னர் தாமதம் செய்கிறார். தன்னை கட்டாயப்படுத்தியதால்தான் ராஜினாமா செய்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முதல்- அமைச்சரின் ராஜினாமா கடிதத்தை ஒருமுறை ஏற்றுக்கொண்டுவிட்டால் அதை திரும்ப பெற அரசியல் சட்டத்தில் இடம் இல்லை. இதுகுறித்து கவர்னர் தனியாக விசாரணை நடத்த வேண்டும். மத்திய பாரதீய ஜனதா அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சூழ்ச்சி செய்கிறது. பாரதீய ஜனதா தனது விருப்பத்தை நிறைவேற்ற, கவர்னரை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது.

ஜனநாயக விரோதம்

கவர்னர் தனது முடிவை தாமதப்படுத்திக்கொண்டே சென்றால் குழப்பங்கள்தான் அதிகரிக்கும். கவர்னர் மவுனமாக இருப்பது ஜனநாயக விரோதம். அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இது எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரத்துக்கு கொண்டு செல்ல வழி வகுக்கும்.

சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் கவர்னர் தனது முடிவை தள்ளிப்போடுவது சரியல்ல. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இருவரும் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனால், எதிர்க்கட்சியான தி.மு.க.வை மெஜாரிட்டியை நிரூபிக்க அழைக்க வேண்டும். இதுதான் அரசியல் ஜனநாயகம்.

ஆனால் மத்திய அரசு தற்போதைய பிரச்சினையை கண்டுகொள்ளாமல் தமிழகத்தை காவி மயமாக்க முயற்சி செய்கிறது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளில் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையில், ஆட்சி அதிகாரத்தில் குழப்பம் நீடிப்பது நல்லது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்