வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? கலெக்டர் நேரில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் கணக்கெடுக்கும் பணியின்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கலெக்டர் ஹரிகரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2017-02-11 22:15 GMT
கலெக்டர் நேரில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள். அந்த பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா? என்று மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நேற்று ஆய்வு நடத்தினார்.

அதன்படி மதுக்கரை வட்டம், செட்டிபாளையம் ஊராட்சியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், சோளம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் நேற்று சென்று பார்வையிட்டார். அப்போது அவர் விவசாயிகளிடம் கூறியதாவது:-

நடவடிக்கை

விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் விவரங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டதை அலுவலர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்போதே அதில் பெயர் திருத்தம், மற்ற பதிவுகள் விடுபட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும்.

பண ஒதுக்கீடு வந்த பின்னர் பெயர் மாற்றமோ, மற்ற பெயர் சேர்த்தல் விவரங்கள் விடுதலோ இருந்தால் சரிசெய்ய இயலாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் வைக்கோல் வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. விரைவில் தீவனங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கேட்டறிந்தார்

அதைத் தொடர்ந்து ஓராட்டுக்குப்பை ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டம் அரசம்பாளையம் ஊராட்சி, பானப்பட்டி ஊராட்சி, அக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் விளைநிலங்களை பதிவு செய்த விவரம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, பொள்ளாச்சி சப்-கலெக்டர் (பொறுப்பு) சுரேஷ் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்