தஞ்சையில் சேவல்சண்டை மலேசியா- 6 மாநிலங்களை சேர்ந்த 1,000 சேவல்கள் பங்கேற்பு

தஞ்சையில் சேவல்சண்டை நேற்று தொடங்கியது. இதில் மலேசியா நாட்டு சேவல் மற்றும் 6 மாநிலங்களை சேர்ந்த 1,000 சேவல்கள் கலந்து கொண்டன.

Update: 2017-02-11 23:00 GMT
தஞ்சாவூர்,

சேவல் சண்டை போட்டி

தமிழர் பொங்கல் வீர விளையாட்டு விழாவையொட்டி தென்மண்டல வீர விளையாட்டு கலை சங்கம் சார்பில் 9-ம் ஆண்டு வெற்றுக்கால்சேவல் சண்டை போட்டி தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகே உள்ள அய்யனார்கோவில் அருகில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ககர், யாக்கூப், தும்மர், ஜாவா, சீத்தா, பொட்டைமாரி என 15 வகையான சேவல்கள் கலந்து கொண்டன. 15 நிமிடம் போட்டி, 15 நிமிடம் இடைவெளி என ஒவ்வொரு சேவல்களுக்கும் 1மணி நேரம் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்காக 30 களங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

1,000 சேவல்கள் பங்கேற்பு

இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம், புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் மலேசிய நாட்டை சேர்ந்த சேவல் என 1,000-த்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்ற சேவல்கள் களத்தை விட்டு வெளியேறினாலும், தலையை தொங்கப்போட்டாலும் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு சேவல்களுக்கும் நுழைவுக்கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டன.

போட்டியில் பங்கேற்ற சேவல்களின் உரிமையாளர்கள் கூறுகையில், “சேவல் சண்டையில் பங்கேற்கும் பல்வேறு வகையான சேவல்களுக்கு 6 மாதத்தில் இருந்தே பயிற்சிகள் அளித்து வருகிறோம். சண்டை சேவல்களுக்கு முட்டை, பாதாம்பருப்பு, கொண்டைக்கடலை, கம்பு போன்ற தானிய வகைகளை உணவாக கொடுப்போம். மேலும் சேவல்களை ஊக்கப்படுத்த குளுக்கோஸ் போன்றவற்றையும் கொடுப்போம். போட்டியில் பங்கேற்ற சேவல்களுக்கு காயம் ஏற்பட்டால் மருத்துவ உதவி அளிப்பதோடு, அடிக்கடி சூடான ஒத்தடம் கொடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் பார்வையிட்டார்

சேவல் சண்டையை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேவல் சண்டையையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கால்நடைத்துறை சார்பில் சேவல்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. பாரம்பரியமான இந்த போட்டியை பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இந்த போட்டி நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சேவல்களின் உரிமையாளர்களிடம் சேவல் வளர்க்கும் முறை, உணவளிக்கும் விதம், சேவல் சண்டைக்கு தயார் செய்யும் முறைகள் குறித்தும் கலெக்டர் அண்ணாதுரை கேட்டறிந்தார்.

பலத்த பாதுகாப்பு

அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் குருமூர்த்தி, கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குனர் மாசிலாமணி, துணை இயக்குனர் ராஜசேகரன், உதவி இயக்குனர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், போட்டி ஏற்பாட்டாளர்கள் ஜோசப்துர்ளி, சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேவல்சண்டையையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்