‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி திருச்சியில் விஜயகாந்த் உடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்தனர்

திருச்சியில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் விஜயகாந்த் உடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்தனர்.

Update: 2017-02-11 23:00 GMT
திருச்சி,

விஜயகாந்த்

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். பெரம்பலூர், அரியலூரில் நேற்று முன்தினம் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு பயணத்தை முடித்த பின் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தார். அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள பிரபல ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். திருச்சியில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நேற்று காலை அந்த ஓட்டலில் நடந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்தனர். ஓட்டலில் அறையில் இருந்து காலை 10.40 மணி அளவில் விஜயகாந்த் வெளியே வந்தார். ஓட்டலில் தொண்டர்கள் புகைப்படம் எடுப்பதற்காக தனியாக ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கத்தில் நாற்காலியில் விஜயகாந்த் அமர்ந்து கொண்டார். அவருடன் தொண்டர்களும், அவர்களது குடும்பத்தினரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தள்ளு-முள்ளு

தொண்டர்கள் வரிசையாக சென்று புகைப்படம் எடுக்க டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் அடிப்படையில் தொண்டர்களை பாதுகாவலர்கள் உள்ளே அனுமதித்தனர்.மேலும் தே.மு.தி.க. உறுப்பினர் அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உறுப்பினர் அட்டை இல்லாதவர்களிடம் பெயர், விவரங்கள் சேகரிக்கப்பட்டு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டன. அதன்பின் விஜயகாந்த் உடன் புகைப்படம் எடுத்தனர்.

புகைப்படம் எடுத்ததும் உடனடியாக தொண்டர்களை கட்சியினர் வெளியேற்றினர். மாற்றுத்திறனாளி தொண்டரான தொட்டியத்தை சேர்ந்த அருணாச்சலம் புகைப்படம் எடுப்பதற்காக வந்திருந்தார். 2 கால்களும் ஊனமாக இருந்ததால் தொண்டர்கள் 2 பேர் அவரை தூக்கிக்கொண்டு வந்தனர். அப்போது கதவு அருகே இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திய போது தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் அருணாச்சலம் கீழே விழுந்தார். இதனால் அருகில் இருந்த தொண்டர்கள் நிலைகுலைந்தனர். பின்னர் மாற்றுத்திறனாளி தொண்டரை தூக்கி விட்டனர். அதனை தொடர்ந்து புகைப்படம் எடுக்க உள்ளே அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பானது.

பேட்டி கொடுக்க மறுப்பு

விஜயகாந்த் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். தமிழகத்தில் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்து அவரிடம் கருத்து கேட்க அரங்கத்தில் அனைவரும் காத்து நின்றனர். விஜயகாந்திடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் முயன்றனர். ஆனால் அவர் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார். நிகழ்ச்சியில் தொண்டர்கள் புகைப்படம் எடுக்க மட்டுமே அனுமதி என்று கட்சி நிர்வாகிகள் கூறிவிட்டனர்.

மேலும் பத்திரிகையாளர்களை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். கட்சி நிர்வாகிகளுடன் மட்டும் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் விஜயராஜன் (மாநகர் மாவட்டம்), செந்தில்குமார் (தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 

மேலும் செய்திகள்