விவசாயியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

விவசாயியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்களும், விவசாயிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-02-11 23:00 GMT
முசிறி,

விவசாயி தற்கொலை

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அம்மன்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது60). விவசாயி. கறவைமாடு வைத்து பால் வியாபாரமும் செய்து வந்தார். இவர், கொளக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கறவை மாட்டுக்கு கடன் வாங்கி இருந்ததாகவும், மேலும் சுயஉதவிக்குழு பொறுப்பாளராக இருந்து 72 பேருக்கு வங்கியில் இருந்து கடன் பெற்று கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருடைய கறவை மாடு மூலம் பெறப்படும் பாலை பாப்பாப்பட்டியில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு கொடுத்து வந்தார்.

கடன் பெற்றவர்கள் வாங்கிய கடனை முறையாக செலுத்திய நிலையில், பாப்பாப்பட்டி பால் சங்கத்தில் நடைபெற்ற முறைகேட்டினால் கடன்தொகை வங்கிக்கு சென்றடையவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் வங்கி நிர்வாகம் கடன் தொகையை செலுத்துமாறு 72 பயனாளிகள் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்தது. இதனால், மன உளைச்சலில் இருந்த ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் அப்பண்ணநல்லூர் பகுதியில் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.

சாலை மறியல் போராட்டம்

இதையடுத்து ராதாகிருஷ்ணனின் உடல் முசிறி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். அப்போது அவருடைய உறவினர்கள், விவசாயிகள் ஆகியோர், ராதாகிருஷ்ணன் சாவுக்கு காரணமான வங்கி மேலாளர் மற்றும் பால் சங்கத்தின் நிர்வாகி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உடலை வாங்க மறுத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் முசிறி கைகாட்டி பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த்(முசிறி), மணிவண்ணன்(தொட்டியம்) ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு ராதாகிருஷ்ணனின் உடலை, உறவினர்கள் பெற்று சென்றனர். திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக முசிறி கைகாட்டி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்