இளம்பெண் சாவில் திருப்பம்: குடும்ப தகராறில் கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரம்

இளம்பெண் சாவில் திடீர் திருப்பம் குடும்ப தகராறில் கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரம் போலீஸ் விசாரணையில் அம்பலம்

Update: 2017-02-11 22:30 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே இளம் பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குடும்ப தகராறில் கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

விருத்தாசலம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் கலைவாணி(வயது 28). இவருக்கும் விருத்தாசலம் குட்டைக்கார தெருவை சேர்ந்த பாபு(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கலைவாணி 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது பாபு வெளிநாடு சென்று விட்டார். கடந்த ஆண்டு கலைவாணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பாபு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

இளம் பெண் சாவில் சந்தேகம்

இந்த நிலையில் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 6–ந் தேதி கலைவாணி தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த பாபு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு கலைவாணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுபற்றி கலைவாணியின் தந்தை தர்மலிங்கத்துக்கு பாபு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தர்மலிங்கம் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகள் கலைவாணி சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் எழில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். கலைவாணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாடகமாடினார்

இந்நிலையில் கலைவாணியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. அதில் கலைவாணியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பாபுவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து பாபு மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் பாபுவை போலீஸ் நிலையத்துக்கு பிடித்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. பாபுவே தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போன்று நாடகமாடி இருப்பது தெரியவந்தது.

கழுத்தை நெரித்து கொன்றேன்

இதுகுறித்து பாபு போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

எனக்கும் கலைவாணிக்கும் திருமணம் ஆனது முதல் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் கலைவாணியை சரமாரியாக தாக்கி அவரது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் வீட்டில் மயங்கி விழுந்ததாக கலைவாணியின் தந்தை தர்மலிங்கத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றேன். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலைவாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கலைவாணியின் சாவு குறித்து தனக்கு எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டேன். இந்த நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது சிக்கி கொண்டேன் என்று கூறினார்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு பாபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாபுவை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கணவனே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு 2 மாதங்களாக ஒன்றுமே தெரியாதது போன்று நாடகமாடி இருக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்