கேலி செய்ததால் இளம்பெண் தற்கொலை: 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்
மதுரை சிலைமானை அடுத்த அனஞ்சியூரை சேர்ந்தவர் விஜயன் என்ற விஜய் (வயது 25). இவரது நண்பர் பாவாபுகர்தீன்(24).
மதுரை,
இவர்கள் இருவரும் கடந்த 2011–ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கேலி செய்தனர். இதனால் அந்த பெண் மனம் உடைந்து தீக்குளித்தார். படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், தன்னுடைய சாவுக்கு விஜய், பாவாபுகர்தீன் தான் காரணம் என்று மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு இறந்தார்.
இதனால் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை தீண்டாமை ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கல்யாணசுந்தரம் ஆஜரானார். விசாரணை முடிவில் விஜய், பாவாபுகர்தீன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார்.