குடிநீர் வராததால் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வந்த கிராம மக்கள்
வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பஞ்சாயத்துக்குட்பட்டது செம்புகுடிபட்டி கிராமம். இங்கு 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வாடிப்பட்டி,
இந்த கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். இதுசம்பந்தமாக பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், அந்தந்த துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு வாடிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயமாணிக்கத்திடம் தங்களது புகார் மனுவை கொடுத்தனர். அவர் யூனியன் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் திடீர் என்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.