தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் பங்கேற்பு

தர்மபுரியில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

Update: 2017-02-11 22:45 GMT

தர்மபுரி,

விழிப்புணர்வு ஊர்வலம்

தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவி உபகரணங்களையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாமிநாதன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:–

இந்தியாவில் 1983–ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழுநோய் கூட்டு மருந்து சிகிச்சை, தர்மபுரி மாவட்டத்தில் 1988–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22–ந்தேதி தொடங்கப்பட்டது. அப்போது 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு 118 ஆக இருந்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 0.48 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அண்மையில் 85 புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து 62 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். தொழுநோய் பாதித்தவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள், குழிப்புண்கள் ஆகியவற்றை குணப்படுத்த தர்மபுரி அருகே குப்பூரில் தொழுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இலவச சிகிச்சை

சிவந்த அல்லது வெளிர்நிற உணர்ச்சியற்ற தேமல் தொழுநோயின் ஆரம்ப அறிகுறியாகும். சிகிச்சை அளிக்கப்படாத நோயாளியின் மூச்சுக்காற்று மூலம் தொழுநோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் ஆரம்ப நிலையிலேயே தொழுநோய் பாதித்தவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தாலே தொழுநோயை முற்றிலுமாக ஒழித்து விடலாம். எனவே இதுபோன்ற அறிகுறி தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி மற்றும்ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி இலவச சிகிச்சையை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஊர்வலத்தில் பள்ளி,கல்லூரி மாணவ–மாணவிகள் திரளாக பங்கேற்று தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர்கள் கார்த்திகேயன், இளவரசு, சிவக்குமார், ஆறுமுகம், டாக்டர்கள் கனிமொழி, ராஜ்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்