கிருஷ்ணகிரியில் பரபரப்பு பழக்கடையில் பயங்கர தீ விபத்து ஓட்டலும், டீக்கடையும் எரிந்து சேதம்

கிருஷ்ணகிரியில் உள்ள பழக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2017-02-04 23:30 GMT

கிருஷ்ணகிரி,

தீ விபத்து

கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 34). இவர் கிருஷ்ணகிரியில் பெங்களூர் சாலையில் பழக்கடை நடத்தி வருகிறார். இங்கு பழங்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் வழக்கம் போல வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கடையின் உள்புறம் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் ஓலையால் போடப்பட்டிருந்த கடையின் மேற்கூரை மற்றும் உள்ளே இருந்த திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் அடங்கிய 50–க்கும் மேற்பட்ட பெட்டிகள் எரிந்து சேதமானது. மேலும் கடையின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிள், 3 தள்ளுவண்டிகளும் எரிந்து சேதம் அடைந்தது.

ஓட்டல், டீக்கடை சேதம்

மேலும் பழக்கடையில் பிடித்த தீ அருகில் உள்ள லண்டன்பேட்டையை சேர்ந்த பாலு(54) என்பவரது ஓட்டலுக்கும், காந்தி நகரை சேர்ந்த திருப்பதி(60) என்பவரது டீக்கடைக்கும் தீ பரவியது. இதனால் அதன் மேற்கூரை முற்றிலும் எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தசாமி தலைமையில் வீரர்கள் மணிமாறன், பாலமுருகன் சற்குணன், ஹரிஹரன் ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனால் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் பேக்கரி கடைக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. தீவிபத்து அதிகாலை ஏற்பட்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

ரூ.3½ லட்சம்

இந்த தீ விபத்தில் மொத்தம் ரூ.3½ லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் முக்கிய சாலை பகுதியில் தீ விபத்து நடந்ததால் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை சரி செய்தார்கள். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்